jdu names arunachal pradesh congress candidate
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான நிதிஷ்குமார், இந்தியில் பேசினார்.
அப்போது திமுக பொருளாளரும், மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு நிதிஷ்குமார் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சொன்னார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிதிஷ்குமார், தேசிய மொழியான இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என்று பேசியது இந்தியா முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தியா கூட்டணியுடன் ஆலோசிக்காமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், வடகிழக்கு மாநில பொறுப்பாளருமான அஃபக் அகமது, அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளார்.
அதன்படி, அருணாச்சல பிரதேச மேற்கு தொகுதியில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் ருகி தாகுங் போட்டியிட உள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பானது தேசிய தலைவர் நிதிஷ்குமார் வழிகாட்டுதலின்படி தான் வெளியிடப்பட்டதாக அஃபக் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி செயற்குழு தலைவர் போசிராம் சிராம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“அருணாச்சல பிரதேசத்தில் கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதிகள் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளரை அறிவித்துள்ளது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அருணாச்சல பிரதேச மேற்கு தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் கிரண் ரிஜிஜு தேர்வானார்.
தற்போது, அவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். இந்த தேர்தலில், அருணாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நபம் துகி இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற நிதிஷ் குமார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலாந்து: மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணி!
jdu names arunachal pradesh congress candidate