JCD Prabhakar quits OPS Team and Start 'AIADMK Coordinating Committee'

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர்.. உருவானது ’அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’!

அரசியல்

அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியை ஜேசிடி பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி மூவரும் இன்று (ஜூன் 8) தொடங்கி உள்ளனர்.

அதிமுக ஒன்றுபட வேண்டும்!

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர், “அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இவற்றை கருத்தில் கொண்டு ‘அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’ என்ற குழுவை தொண்டர்களை மனதில் வைத்து இன்று தொடங்கி உள்ளோம்.

நான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக இருந்தேன். ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒன்றை வைத்து விட்டு நான் ஒரு அணியில் இருப்பது சரியானதாக எனக்கு தோன்றவில்லை.

எனவே, இந்த நிமிடம் முதல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்கிறேன்.

எனது நோக்கம் பிரிந்துள்ள அனைத்து அதிமுகவினரும் ஒன்றாக இணையவேண்டும் என்பதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் செல்லும் திசையில் நம்பிக்கை இல்லை!

அவரைத் தொடர்ந்து பேசிய புகழேந்தி, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 7 இடங்களில் டெபாசிட் காலியாகிவிட்டது. இதை யாரையும் குறை கூறுவதற்காக சொல்லவில்லை. வருத்தமாக இருக்கிறது.

ஜெயலலிதா இருந்தபோது அவரை பாஜகவினர் யாரும் இந்துத்துவா தலைவர் என்று பேசவில்லை. பன்னீர் செல்வத்திற்கும் எங்களுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை.

பன்னீர் செல்வம் பயணிக்கும் திசை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மொத்தமாக யாரோ ஒருவர் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றவர்களுக்கும், அவர்களை வெற்றி பெற வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

அதிமுகவில் பிரிந்து இருக்கும் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இணையவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இங்கு இணைந்திருக்கிறோம்.

ஒற்றுமை வேண்டியே ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளோம். யாரையும் எதிர்ப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்து அதிமுக இருக்கக்கூடாது!

பின்னர் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, “நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு பெரிய இடியாக இருந்தது.

எனவே, அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை எந்த அணியையும் சாராமல் மேற்கொண்டுள்ளோம். தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்தோ, சார்ந்தோ அதிமுக இருக்கக்கூடாது.

அதிமுகவை மீண்டும் தேர்தலில் வெற்றி பெறும் இயக்கமாக மாற்ற வேண்டும். முன்னதாக உட்கட்சிகளுக்கு இடையே நிலவும் பூசல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீட் தேர்வில் முறைகேடு… விசாரணை குழு அமைக்கப்படும் : சஞ்சய் மூர்த்தி

இந்தியா – பாரத் : மோடியின் 3வது ஆட்சியில் ஆளுநரின் முதல் சர்ச்சை!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *