அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நிறுவனத்தின் மதிப்பு 130 கோடி ரூபாயாக உயர்ந்தது எப்படி என்று திமுக இளைஞரணி செயலாளாரும் அமைச்சருமான உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுக கூட்டம் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின். திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நேற்று அமித் ஷா என்னைப் பற்றிப் பேசியிருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவது மட்டும் தான் நம்முடைய தலைவரின் லட்சியம் என்று கூறியிருக்கிறார்.
நான் மக்களைச் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகி கழக தலைவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைச்சராகியிருக்கிறேன்.
நான் ஒன்றே ஒன்றை மட்டும் அமித் ஷாவிடம் கேட்கிறேன். உங்கள் மகன் எப்படி பிசிசிஐ பிரசிடண்ட் ஆனார்?.
உங்களுடைய மகன் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். எத்தனை ரன் அடித்திருக்கிறார் என்று எதாவது நான் கேட்டிருக்கிறேனா.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா ஒரு நிறுவனத்தை நடத்துகிறார். ஜெயின் குசும் ஃபின்சர்வ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பாஜக ஆட்சிக்கு வரும் போது இந்நிறுவனத்தின் மதிப்பு 75 லட்சம் ரூபாயாக இருந்தது.
ஆனால் இன்று அதன் மதிப்பு 130 கோடி ரூபாயாக இருக்கிறது. எப்படி வந்தது இந்த வளர்ச்சி.
உங்களுடைய மகன் எதை வைத்து இப்படி வந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் என்னை குறை சொல்லிவிட்டு போயிருக்கிறார் அமித்ஷா” என்று விமர்சித்தார்.
நேற்று ராமேஸ்வரத்தில் என் மண், என் மக்கள் துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “திமுக ஒரு ஊழல் கட்சி. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டுமென்று ஆசை. வாரிசு அரசியல் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்த நிலையில் உதயநிதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
பிரியா
பட்டாசு குடோனில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
பத்ரி சேஷாத்ரி கைது: அண்ணாமலை கண்டனம்!