டெல்லியில் டிசம்பர் 22 ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழக வெள்ள பாதிப்பு தேசிய பேரிடர் நிதியை தருமாறு மாநில அரசு கோரிக்கை வைத்த நிலையில்… தேசிய பேரிடர் என்ற சிஸ்டமே இல்லை என்றும் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.
தவிர மழை நீர் வடிகாலுக்காக சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாக அமைச்சர்கள் மாற்றி மாற்றி பேசுவது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் திட்டக் குழு துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் மின்னம்பலம் இணைய தள வாசகர்களுக்காக…
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டாதீர்கள். சென்ற ஆண்டு என்டிஆர்எப்-இல் இருந்து கொடுத்த ரூ.800 கோடி உங்கள் கையில் இருக்கிறது. இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய 900 கோடியில் 450 கோடியை முன்கூட்டியே கொடுத்து விட்டோம். மீதம் உள்ள 450 கோடி மார்ச் மாதம் கொடுக்க வேண்டும். ஆனால் அதையும் நாங்கள் இப்போதே கொடுத்து விட்டோம். அதனால் ஒன்றிய அரசை அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளாரே?
நிர்மலா சீதாராமன் கூறுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், பேரிடர் நிவாரணத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கேட்டு பெறும் நிதி. மற்றொன்று கேட்காமல் ஒன்றிய அரசிடமிருந்து கொடுக்கப்படும் நிதி. பேரிடர் நிவாரணம் பெறுவதற்கு எந்த விதமான நிலையான கோட்பாடுகளும் இல்லை.
12ம் நிதிக்குழு வரையில் பேரிடர் வரும்போது எவ்வளவு நிதி தேவை எனப் பார்த்து அதற்கு ஏற்ப நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இப்போது நடப்பது 15வது நிதி குழு காலம். ஆனால் இப்போது மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய அளவில் கொடுக்கக்கூடிய நிதி என்று இருவகையாகப் பிரித்துக் கொடுத்து வருகின்றனர்.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரிடர்களுக்கு இவ்வளவு பணம் என்று ஒதுக்கி அதன் கீழ் கொடுக்கப்படும் நிதி. தீர்மானிக்கப்படும் தொகையில் 75 சதவீதம் தொகையை ஒன்றிய அரசு வழங்கும். மீதமுள்ள 25 சதவீத தொகையை தங்களுடைய வருமானங்களில் இருந்து மாநில அரசுகள் ஒதுக்கி கொள்ள வேண்டும். அப்படி ஒதுக்கும் பணம் தான் நிதியமைச்சர் குறிப்பிடும் பணம்.
தமிழ்நாட்டுக்கு ஒரு ஆண்டுக்கு ஒதுக்கப்படும் நிதி 1200 கோடி. அதில் அவர்களுடைய பங்கு 900 கோடி. அதை இரண்டு தவணைகளில் 450, 450 கோடியாக மாநிலத்திற்கு கொடுப்பார்கள்.
இந்த நிதியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அவ்வப்போது வரக்கூடிய பிரச்சினைகளை சமாளித்துக் கொள்ள வேண்டும். அதை தாண்டி எதிர்பாராத விதமாக பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சனைகளை, உதாரணத்திற்கு பெரிய புயல், வறட்சி, பூச்சிகள் தாக்குதல், நிலநடுக்கம், பூகம்பம் அல்லது சுனாமி போன்ற பேரிடர்கள் வரும்போது எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை மதிப்பீட்டு அறிக்கையாகத் தயார் செய்து ஒன்றிய அரசாங்கத்திற்கு மாநில அரசு சமர்ப்பிக்கும்.
அப்படி அறிக்கை சமர்ப்பித்த பின் ஒன்றிய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு ஒரு குழுவை அனுப்பும். அந்த குழு நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து ஒரு முறை மதிப்பீடு செய்வார்கள்.
அவர்களுடைய மதிப்பீட்டையும் மாநில அரசாங்கம் சமர்ப்பித்த மதிப்பீட்டையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு எவ்வளவு தொகையை பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு விடுவிப்பது என்று ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்யும். அதுதான் நேஷனல் டிசாஸ்டர் பண்ட். பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது calamity of severe nature என்று ஒன்றிய அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக்கொண்டால் தான் இந்த தொகை மாநில அரசாங்கத்திற்கு வழங்கப்படும்.
ஒன்றிய நிதி அமைச்சர் குறிப்பிடும்போது தேசிய பேரிடர் என்று இதுவரை அறிவிக்கப்பட்டதே இல்லை என்று கூறுகிறாரே ?
தேசிய பேரிடர் என்றே அறிவிக்க வேண்டாம். கிளாமிட்டி ஆப் சிவியர் நேச்சர் என்று கூறினாலே நேஷனல் டிசாஸ்டர் ஃபண்டிலிருந்து நிதி கொடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்திக்கும் போது சென்னையில் வெள்ளம் வந்ததற்கான அறிக்கையை கொடுத்திருக்கிறார். ஒன்றிய அரசின் குழு வந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு தமிழ்நாடு அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறிச் சென்றுள்ளனர்.
அதற்கு பிறகு தான் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. அங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்னும் காரணத்தால் தான் முதலில் கொஞ்சம் தொகையை கொடுத்துவிட்டு பிறகு வந்து பார்வையிட்டு அறிக்கை தயார் செய்யுங்கள் என்று கேட்கிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இடைக்கால நிதி என்று ஒரு தொகையை மாநில அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது.
2021 ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு பேரிடர் வருகிறது, பிரதமர் உடனே சென்று அதை பார்வையிடுகிறார். அப்பொழுதே ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறார்கள். அதுபோல ஏன் தமிழ்நாட்டுக்கு செய்யவில்லை ?
வெவ்வேறு சமயங்களில் ஹிமாச்சல் பிரதேஷ், குஜராத், சிக்கிம் ஆகிய இடங்களில் இதே போன்ற பேரிடர் ஏற்படும்போது அவர்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர். தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் சென்னையை விட அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே முன்பணமாக ஒரு தொகை தாருங்கள் பிறகு பாதிப்புகளை கணக்கெடுத்த பின்பு அதற்கான தொகையை கொடுங்கள் என்று கேட்கிறோம்.
அதற்கு தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று கூறுகிறாரே ?
இடைக்கால நிவாரணம் என்று ஒன்று எதற்கு இருக்கிறது ? இப்படிப்பட்ட பேரடரில் எப்படி பொறுமையாக இருக்க முடியும். கைக்குழந்தையை வைத்துக்கொண்டு பொதுமக்கள் முதியவர்கள் என அனைவரும் தண்ணீருக்குள் போராடிக் கொண்டிருக்கும் போது உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் எல்லாம் கொடுக்க வேண்டும். அதற்கு உடனடியாக பணம் தேவைப்படும்.
இவர்கள் கூறுவது போல் முன்கூட்டியே கொடுத்த பணம் பத்தாது என்று தான் மேலும் கேட்கிறோம். இப்போது அவர்கள் கொடுத்ததாக கூறும் 450 கோடியும் வெள்ளமே வரவில்லை என்றாலும் கொடுத்திருக்கத்தான் வேண்டும்.
அந்த தொகை எப்படி இவ்வளவு பெரிய பேரிடரை சமாளிப்பதற்கு போதுமான தொகையாக இருக்கும். நீங்கள் சொல்வது போல் இப்படி அறிவிக்கும் வழக்கமே இல்லை என்றால் மற்ற மாநிலங்களுக்கு எப்படி தொகை கொடுத்தீர்கள்?
மாநில அரசுக்கு வருடா வருடம் சேர வேண்டிய தொகையை தான் கொடுத்து இருக்கிறார்கள். வெள்ள நிவாரணம் இதில் எங்கே வந்தது ? பேரிடர் வரும்போது கொடுக்க வேண்டிய தொகையை கொடுங்கள் என்று கேட்டால் இல்லை நாங்கள் வருடா வருடம் கொடுக்கும் தொகையை கொடுக்கிறோம் என்று செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடியை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மழை நீர் வடிகால் பணிகளுக்கான 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த நிதி எவ்வளவு சதவிகிதம் செலவிடப்பட்டிருக்கிறது என்பதில் அரசுத் தரப்பிலேயே மாறி மாறி சொல்கிறார்கள். அந்த 4000 கோடி பணம் எங்கு போனது ? அதை எப்படி செலவு செய்தீர்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்புகிறாரே?
இதற்குண்டான புள்ளி விவரம் எல்லாம் ஒன்றிய அரசு கேட்கும் போது தமிழ்நாடு அரசு கட்டாயம் கொடுக்கும். இதை கண்காணிக்க சிஏஜி குழு என்று தனியாக ஒரு குழு இருக்கிறது.
அரசாங்கம் எங்கு எத்தனை ரூபாய் செலவு செய்தாலும் அதற்கான கணக்கை சிஏஜி குழு ஒப்புதல் அளிக்காமல் தொகை வழங்கப்படாது. நிர்மலா சீதாராமன் பேசுவது அரசியலுக்காக மட்டுமே என்பதாக உள்ளது. தண்ணீரில் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று பணம் கேட்டால், நீ வாய்க்கால் வெட்டினாயே அது என்னவானது என்று கேட்டால் என்ன அர்த்தம் ? எப்போது கேட்க வேண்டிய கேள்வி அது ? இந்த கேள்வியை கேட்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதா? சி ஏ ஜி உங்களைப் பற்றி தந்த அறிக்கைகளுக்கே நீங்கள் பதில் சொல்வதில்லை.
வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கும் கருவிகளை கொண்டுள்ளது.. அப்படி அவர்கள் கணித்து சொல்லியும் கூட ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் கேட்டுள்ளார் நிதியமைச்சர்…
மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளார்கள். அதிகபட்சம் 21 சென்டிமீட்டர் பெய்யும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் 55 சென்டிமீட்டர் பெய்கிறது. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் 95 சென்டிமீட்டர் பெய்கிறது. அதுதான் பிரச்சனை. வானிலை ஆய்வு மையம் சொன்னதற்கு மேல் அல்லவா பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் தானே அறிவிக்கிறார்கள். அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
அதிகபட்ச லிமிட் 21 தான் உள்ளது. அதற்கு மேல் மழை பதிவாகியுள்ளபோது அதற்கான முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு இதை அரசியல் செய்வதில் என்ன லாபம் இருக்கிறது? மாநில அரசு மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் அமர்ந்து கொண்டு அக்கப்போர் செய்வது மட்டுமே அவர்கள் வேலையாக இருக்கிறது.
நிதி கேட்டதும் கொடுப்பதற்கு ஏ.டி.எம். வைத்திருக்கிறோமா என்ற ஒன்றிய அமைச்சரின் கருத்து பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி, ‘நாங்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்தை கேட்கவில்லையே மக்கள் பணத்தை தானே கேட்கிறோம் ,”என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்புகிறார். இது அரசியல் ரீதியாக ஒரு விவாத பொருளாக மாறுகிறது. இது அவசியம் என்று நினைக்கிறீர்களா ?
இது அவசியம் தான். இல்லை என்றால் அரசியல் சுவாரசியமாக இருக்காதே. இதற்கு இவ்வளவு கோபப்படுகிறீர்களே… மாமா வீட்டு பணமா என்று மோடி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். பத்து வருடம் முன்பு மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது காங்கிரசை பார்த்து,” இது என்ன உன் மாமா வீட்டு பணமா?”என்று கேட்டிருக்கிறார். உதயநிதி அவர்கள் இது உன் அப்பா வீட்டு பணமா என்று கேட்கிறார். இதில் எது சரி? மாமா வீட்டு பணத்தில் நமக்கு உரிமை இல்லை. அது மாமாவின் பிள்ளைகளுக்குத்தான். அப்பா வீட்டுப் பணத்தில்தான் உரிமை உள்ளது.
இப்போது நிதியமைச்சராக இருக்கிறவர் இதெல்லாம் பேச வேண்டும் என்று அவசியமே இல்லை. அவர் அரசியலுக்காக பேசிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால் … 2000 கோடி கேட்ட இடத்தில் 2000 கோடி என்று இல்லை அட்வான்ஸ் ஆக 200 கோடி கொடுங்கள். டெல்லியில் இருந்து கொண்டே கொடுக்கலாம். எங்கேயும் சென்று கொடுக்க தேவையில்லை. நம்முடைய பணத்தை உரிமையைதான் நாம் கேட்கிறோம். மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது அக்கப்போர் செய்துகொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. ரிலீஃப் என்றால் உடனடியாக கொடுப்பதற்குத்தான். மக்களை மீட்பதற்காக உடனடியாக கொடுப்பதற்குத்தான் இந்த நிதி” என்று பேட்டியில் கூறியிருக்கிறார் ஜெயரஞ்சன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீடியோவில் காண: https://www.youtube.com/watch?v=Qt8yIGqY3ko
நேர்காணல்: பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு: சண்முகப்பிரியா
வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா?: அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை கேள்வி!
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்: வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?