–ஜாசன்
இந்துத்துவா… இப்போது இந்த வார்த்தை தான் ட்ரெண்டிங் என்று தப்புக் கணக்கு போடுகிறார் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை.
அவரது நிருபர் சந்திப்பு என்பது அவரது வசதிக்காக தான் இருக்கும். அதை தாண்டி அவரை சங்கடப்படுத்தினாற்போல் ஏதாவது கேள்வி கேட்டால் இப்படி கேள்வி எல்லாம் திமுகவை பார்த்து கேட்பீர்களா என்று திசை திருப்பி அந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து விடுவார்.
இப்போது அவர் சொல்ல வந்திருப்பது ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதுதான். அதற்கு அவர் சொல்லும் உதாரணம்… ஜெயலலிதா கரசேவையை ஆதரித்தார், ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்தார், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை எதிர்த்தார், சேதுபாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றார்… இப்படி வரிசைப்படுத்தி அவர் இந்துத்துவா தலைவர் போலவும் இப்போதிருக்கும் அதிமுக அதற்கு எதிராக இருப்பது போலவும் சொல்ல முயற்சிக்கிறார் அண்ணாமலை.
அந்த நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலையிடம் நிருபர்கள் இரண்டு கேள்விகளை கேட்டு இருக்க வேண்டும். வாஜ்பாய் அரசை கவிழ்த்தபொழுது, சங்கராச்சாரியாரை கைது செய்த போது ஜெயலலிதா இந்துத்துவா கொள்கைக்கு லீவு விட்டிருந்தாரா? என்று கேட்டிருந்தால் அந்தப் பேட்டியே பிசுபிசுத்துப் போயிருக்கும்.
இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று அண்ணாமலை சொல்கிறார். உச்சநீதிமன்றம் அது மட்டுமா சொல்லியது? தேர்தல் ஆணையர் தேர்வில் நியமிக்கப்படும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்று சொன்னபோது அதற்காக அரசியல் சட்டத்தை திருத்தியது பாஜக. அதாவது அந்த குழுவில் உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பு தேவையில்லை என்பதற்காக.
இந்துத்துவா வாழ்வியல் முறை என்பதற்கு உச்ச நீதிமன்றம் ஏன் போக வேண்டும்? சாமானியனை கேட்டாலே சொல்லி இருப்பார். தமிழகத்தைப் பொறுத்தவரை மதம் என்பது தனிமனித விருப்பம் சார்ந்தது. அவர்கள் அதை அரசியலுடன் போட்டு என்றுமே குழப்பிக் கொண்டது கிடையாது.
அதனால்தான் பேரறிஞர் அண்ணா அன்று, ’நான் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்’ என்றும்… ’ஒன்றே குலம் ஒருவனே. தேவன்’ என்றும் சொல்லி கடந்து போய்விட்டார்.
1967-இல் அண்ணா சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த பிரம்மாண்டமான வெற்றியை கொண்டாடுவதற்கு முன் திருச்சியில் இருந்த பெரியாரை சந்தித்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றார். இத்தனைக்கும் பெரியார் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அண்ணாவையும் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியாரை சந்தித்தார் அண்ணா. அரசியல் நாகரிகம் என்ற வார்த்தை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற உதாரணம் இதெல்லாம் அரசியலில் அண்ணா அறிமுகப்படுத்திய வார்த்தை.
கரசேவையை ஜெயலலிதா ஆதரித்தார் என்கிறார் அண்ணாமலை. பாபர் மசூதி இடிப்பதில் கரசேவை பங்களிப்பில் பாஜகவை விட பால் தாக்கரேவின் சிவசேனா தீவிரம் காட்டியது என்பதுதான் வரலாறு.
இன்றைக்கு பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே பாரதிய ஜனதாவை ஆட்சியை விட்டு துரத்த வேண்டும். மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசுகிறார். அவர்கள் ஜெயலலிதாவை விட தீவிர இந்துத்துவா பற்றாளர்கள்.
ஒரு முறை பாரதிய ஜனதா திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதனால் கலைஞரை இந்துத்துவா பற்றாளர் என்று சொல்லிவிட முடியுமா? ஜெயலலிதா பாப்பாத்தி என்று பெருமையாக சட்டசபையில் சொன்னார். ஆன்மீக நகரமான ஸ்ரீரங்கம் தொகுதி உள்ளிட்ட திருச்சி பொதுத் தொகுதியில் தலித் ஏழுமலை என்ற தனித் தொகுதி வேட்பாளரை நிற்க வைத்து வெற்றி பெற செய்தார். ஜெயலலிதாவின் இந்துத்துவா கொள்கை இந்த மாதிரி தான். நான் செய்த மிகப்பெரிய தவறு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததுதான்… அந்தத் தவறை மீண்டும் கண்டிப்பாக செய்யமாட்டேன் என்று சொன்னவரும் ஜெயலலிதா தான்.
பாரதிய ஜனதாவில் சிக்கந்தர் பகத் என்று ஒரு முஸ்லிம் நிர்வாகியாக இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என்ற பொறுப்பெல்லாம் வகித்தார். அவரை இந்துத்துவா கொள்கையாளர் என்றா சொல்லியது பாஜக? இல்லை, ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்போது பாஜகவிற்கு ஒரு முஸ்லிம் தேவைப்பட்டார் அவ்வளவுதான். இப்போதும் தமிழக பாஜகவில் முஸ்லிம்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இதற்கும் அடிப்படை தேர்தல் அரசியல் தான்.
குடியுரிமை சட்டம் மாநிலங்களவையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக தயவில் தான் நிறைவேறியது. அப்போது எடப்பாடி இந்துத்துவா பற்றாளராக அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறார்.
இப்போது அவர் இந்துத்துவ பற்றாளர் இல்லை என்கிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் அவர் ராமர் கோயிலுக்கு போகவில்லையாம். முட்டியில் வலு இல்லையாம், முட்டி வலி என்று தவிர்க்கிறாராம்.
குடியரசுத் தலைவர் சென்ற வாரம் தான் அயோத்தி ராமரை சென்று தரிசித்தார். அவர் இத்தனை நாள் ஏன் போகவில்லை என்பதற்கான காரணத்தை அண்ணாமலையால் சொல்ல முடியுமா? இந்தியாவின் முதல் குடிமகள். ஆனால் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அவருக்கு அழைப்பு இல்லை.
முருக பக்தர்கள் மாநாட்டை விரைவில் இந்து அறநிலையத்துறை பழனியில் நடத்த இருக்கிறது. சேகர் பாபு தீவிர ஆன்மீகப் பற்றாளர். மாதம் தோறும் கருமாரியம்மன் கோயில் போகிறார். மாங்காடு போகிறார். நினைத்தபோது சபரிமலை போகிறார். ஆனால் அவர் தீவிர திராவிடப் பற்றாளரும் கூட. அவர் கொள்கையையும் கோயிலையும் போட்டு அண்ணாமலைப் போல் குழப்பிக் கொள்வதில்லை, தெளிவாக இருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்தில் வாசலில் நிற்கும் கார்களைப் பார்த்தால் உள்ளே சீனிவாச பெருமாள் இருப்பார், முருகர் இருப்பார், அம்மன் இருப்பாள். திராவிட கட்சிகள் எப்போதும் மதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது வழக்கம் இல்லை.
எம்ஜிஆர் விபூதி, குங்குமம் பூசியதில்லை. ஆனால் மூகாம்பிகை கோயிலுக்கு தொடர்ந்து போய்க் கொண்டிருந்தார்.அவரை அண்ணாமலை திராவிட தலைவர் என்று சொல்வாரா அல்லது இந்துத்துவா தலைவர் என்று சொல்வாரா?
எடப்பாடி இந்துத்துவா தலைவர் இல்லை. ஆனால், அவருடன் கூட்டணி வைக்க கடைசி வரை பாரதிய ஜனதா முயற்சி செய்தது. பாரதிய ஜனதா அவரை வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்தான் பாரதிய ஜனதாவை வேண்டாம் என்று உறுதியாக இருந்தார்.
ஊழலுக்காக சிறை போன முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொன்ன அண்ணாமலைதான் அதே ஜெயலலிதாவை, இந்துத்துவா தலைவர் என்று வர்ணிக்கிறார். இது அண்ணாமலைக்கு புதியதல்ல.
தமிழக மக்கள் தங்கள் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் முதலில் மருத்துவரை சந்திக்க மாட்டார்கள், மந்திரித்துக் கொள்வதற்கு மசூதிக்குதான் முதலில் போவார்கள். அவர்கள் பிள்ளையார் கோவிலுக்கும் போவார்கள் வேளாங்கண்ணி சர்ச்சுக்கும் போவார்கள். நாகூர் தர்காவுக்கும் போவார்கள். அவர்களுக்கு தெரிந்த இந்துத்துவா கொள்கை இதுதான். ஏனென்றால் அவர்கள் மனதில் எந்த குழப்பமும் இல்லை. இதுதான் தமிழ்நாடு, தமிழனின் இந்துத்துவா கொள்கை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள்… நாடு திரும்பிய பிரஜ்வல்: நள்ளிரவில் கைது!
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்: ஏன்?