தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்லடத்தில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் விரிவான முக்கியப் பகுதிகள் இங்கே:
”தமிழ்நாட்டில் கொங்குப் பகுதி இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் மிக முக்கியமான பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்பகுதி தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த பகுதியாக இருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழுக்காக செய்தேன்!
தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல, சிறப்பு வாய்ந்ததும் கூட. ஐ.நாவில் பேசிய போது நான் படித்த தமிழ் கவிதையை அங்கே படித்தேன். அதைக் கேட்ட பிறகு ’வெளிநாட்டில் கூட இதைக் கேட்க முடியுமா?’ என்று என்னைப் பார்த்து பலர் கேள்வி கேட்டார்கள். எனது தொகுதியில் காசி தமிழ் சங்கமம் என்ற மிகப்பெரிய சங்கமத்தை நடத்தி முடித்தேன். அதுகுறித்து மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், ’என்ன தமிழுக்காக நீங்கள் இவ்வளவு செய்கிறீர்களே?’ என்று. அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் மிக உயர்ந்த இடமான பாராளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோலை வைத்து அதற்கு மிகப் பெரிய மரியாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறேன். இதன்காரணமாக தமிழ்நாட்டு மக்கள் என் மீது அன்பு கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
பிரிவு 370-ஐ குப்பையில் வீசியிருக்கிறோம்!
1991-ல் தமிழகத்தில் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீரின் லால் செளக் வரையிலான ஏக்தா யாத்திரையை நான் நடத்திச் சென்றேன். அப்போது எனக்கு இரண்டு நோக்கம் இருந்தது. ஒன்று லால் செளக்கில் நமது தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். இரண்டாவது காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்க வேண்டும் என்பது. இன்று லால் செளக்கில் நிரந்தரமாக நமது தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது காஷ்மீரில் பிரிவு 370ஐ ரத்து செய்து அதை குப்பையில் வீசி மிகப்பெரிய சாதனையை நாம் செய்திருக்கிறோம்.
தமிழகத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்!
தமிழ்நாட்டில் தற்போது பாஜகவின் பலம் பெருகி வருகிறது. இதைத் தடுக்க தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் மக்களிடம் பொய்யைப் பரப்பி வருகிறார்கள். மக்களிடையே சண்டை மூட்டி, விரோதத்தைத் தூண்டி அதன் மூலம் மக்களைப் பிரித்து அவர்களுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பொய்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கபட நாடகம் இப்போது வெளியே வந்துவிட்டது. அவர்களின் ஊழல்களும் இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனால் மக்களிடம் பாஜக மீது மிகப்பெரும் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.
காங்கிரசை விட 3 மடங்கு அதிக நிதி கொடுத்தோம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக எப்போதும் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது. 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரசும் திமுகவும் கூட்டணியில் இருந்த அரசாங்கம் எவ்வளவு தமிழகத்திற்கு கொடுத்ததோ, அதைவிட மூன்று மடங்கு நிதியை தமிழக வளர்ச்சிக்காக பாஜக அரசு கொடுத்திருக்கிறது. திமுகவினர் காங்கிரசுடன் நீண்டகால நண்பர்களாக இருக்கிறார்கள். மிக முக்கியமான அமைச்சர் பதவிகளை மத்தியில் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.
மோடியின் உத்திரவாதம்!
தமிழ்நாட்டில் மோடியின் உத்திரவாதப்படி மூன்றரை கோடி மக்களுக்கு நாம் அரிசியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் 40 லட்சம் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுத்திருக்கோம். 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை பிரதமர் வீடு வசதித் திட்டத்தின் கீழ் கட்டித் தந்திருக்கிறோம். ஆகவே மோடி உத்திரவாதம் என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆரும்… ஜெயலலிதாவும்…
இன்று தமிழ்நாட்டிற்கு வந்த போது எம்.ஜி.ஆர் என் நினைவிற்கு வந்தார். நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் சென்றேன். அங்கே மக்களிடம் பேசினேன். இன்று அவர் முதலமைச்சராகப் பணியாற்றிய மண்ணுக்கு வந்திருக்கிறேன். மிகப்பெரிய நல்லாட்சி நடத்தி தரமான கல்வி மற்றும் நல்ல சுகாதாரத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவர் என்று இன்றும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் குடும்ப அரசியல் காராணமாக ஆட்சிக்கு வரவில்லை. அவர் திறமைகளின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆனால் இன்று திமுகவானது எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல அவரை கேவலப்படுத்தும் ஒரு ஆட்சியை இங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு இங்கே ஒருவர் நல்லாட்சி கொடுத்திருக்கிறார் என்றால் அது ஜெயலலிதா என்றுதான் சொல்ல முடியும். அவர் தனது வாழ்நாள் முழுதையும் மக்களின் வளர்ச்சிக்காக கொடுத்தார். அதன் காரணமாகத் தான் இன்றும் தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் அவரை நினைவு கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட்டது. இந்த மண்ணிலிருந்து அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி!
நாட்டின் வளர்ச்சி என்று நாம் சொல்லும்போது அது தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். ஆகவே நாடு எப்படி வளர்கிறதோ அதேவேகத்தில் தமிழ்நாடு வளரும் என்பதை மோடி உத்திரவாதம் உறுதி செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்திய நாட்டைக் குறித்து எப்போதும் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நாட்டிற்காக இரண்டு பாதுகாப்பு தொழிற்சாலை தயாரிப்பு இடங்களை தேர்வு செய்தபோது, அதில் ஒரு இடமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து ராணுவத் தளவாடங்களை பெரிய அளவில் நாம் தயாரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்று ஒரு கூட்டணி இருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டில் வளர்ச்சி வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ராணுவத்திற்கு வாங்கிய பாதுகாப்பு உபகரணங்களில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வாங்கிய காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழிற்சாலைகள் வந்தால் அனுமதிப்பார்களா? லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு காங்கிரஸ் அனுமதிக்குமா?
ஜவுளித்துறையில் PLI என்ற திட்டத்தின் மூலம் 20,000 கோடிக்கு ஜவுளிப்பூங்கா திட்டத்தை கொண்டு வருகிறோம். அதன்மூலமாக 2 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் நிலைமை தமிழ்நாட்டில் உருவாகிறது. அதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முத்ரா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் தொழில்முனைவோருக்கு 2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் சாத்தியமாகுமா?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறேன்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மோடி கடுமையாக உழைத்து வருவதால் எதிர்கட்சிகள் அனைத்தும் என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நாம் புதிய பாரதத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வந்திருக்கிறோம். இந்தியா கூட்டணியினர் எப்படியாவது என் மீது அவதூறு பரப்பி, பொய்யான உருவத்தை உருவாக்க முயல்கிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே இக்கூட்டணியை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்கும் கடையை பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது. இந்தியா கூட்டணி ஜெயிக்காது என்று உறுதியாகிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படியாவது கொள்ளையடிக்க அக்கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை அவர்களின் இந்த கொள்ளையடிக்கும் வழிகளை அடைப்பதற்கான ஒரு பூட்டினை உருவாக்கியிருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
மோடி முன்னிலையில் அண்ணாமலை வேண்டுகோள்!
காளிதாஸ் ஜெயராமுடன் சேர்ந்து நடிப்பதற்கு யோசிக்க வேண்டும் : அர்ஜுன் தாஸ்
அய்யா, எங்களுக்கு சில சந்தேகம் இருக்குய்யா, ஒண்ணொண்ணா சொல்லட்டுங்களாய்யா,
1. தமிழுக்காக அத சென்ஜேன், இத சென்ஜேன்னு சொல்றீங்களெ, தமிழு, இந்தி, சமக்கிருதம் இதுகளுக்கு எவ்ளோ நிதி ஒதுக்கி இருக்கீங்கனு சொல்லிருங்கய்யா
2. காஷ்மிருல 370 நீக்கிட்டோம்னு சொல்றீங்க, சரி, இன்னிக்கு வரை அங்க ஏன் தேர்தலே நடத்தல?
3. தமிழகத்துல இருந்து ஜிஎஸ்டி வரி அதிகமாய் வாங்கி விட்டு குறைச்சலா கொடுத்து கொள்ளை அடிக்கறது பத்திதானே சொல்றீங்க?
4. தமிழ்நாட்டுக்கு எவ்ளோ நிதி கொடுத்து இருக்கீங்கனு சொல்லுங்கய்யா, எங்க முதல்வரு பொய் சொல்றாருனு நிரூபிங்கய்யா
5.எம்ஜியார் பத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள விட எங்களுக்கு ரொம்பவே தெரியுங்கய்யா. ஆனா இந்த ஜெ அம்மாவை பாக்க நீங்க போயசு கார்டன்ல எவ்ளோ நேரம் காத்திருந்தீங்கனும் எங்களுக்குத் தெரியும். அதே போல பரப்பன அக்ரகாரம் பத்தியும் எங்களுக்கு தெரியுங்கய்யா
நன்றி வணக்கங்கய்யா.