போயஸ் தோட்ட வீடு விற்பனை செய்யவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகப் பரவி வந்த செய்திக்கு ஜெ. தீபா மறுப்பு தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை விற்பனை செய்ய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவும், தீபக்கும் முடிவு செய்து இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதற்கு ஜெ. தீபா மற்றும் தீபக் இருவருமே மறுப்பு தெரிவித்தனர். மேலும் சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வீட்டிற்குள் சென்று விடுவார் எனவும் பேசப்பட்டு வந்தன.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 5) ஜெ. தீபா போயஸ் கார்டன் வீட்டிற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று ஆடியோ வெளியிட்டார். “இந்த வீடு எனது பாட்டியால் கட்டப்பட்டது.
அதன் பிறகு எனது அத்தைக்கு அவர் இந்த வீட்டைக் கொடுத்தார். நாங்கள் எங்கள் சிறு வயதில் அந்த வீட்டில் வளர்ந்துள்ளோம். இது எங்கள் பூர்வீக சொத்து. இதற்கு யாரும் உரிமை கோர முடியாது.
எனக்கு என் அத்தை மட்டும்தான் முக்கியம், அவருடன் யார் இருந்தார்கள், யாரெல்லாம் வந்தார், போனார் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை.

எனது அத்தை பல பிரமிக்கத்தக்கப் பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளை வகித்தவர். பல இடங்களுக்குச் சென்று பயணித்தவர்.
அதனால், அவருக்கு உதவி செய்ய, ஆலோசனை அளிப்பதற்கு அவருடன் ஆயிரக்கணக்கானவர்கள் உடன் இருந்திருப்பார்கள்.
அதற்காக அவர்கள் எல்லோரும் போயஸ் கார்டனை உரிமை கோர முடியாது. குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது. எனது அத்தையுடன் பயணித்ததாகச் சொல்லும் சசிகலாவுக்கு இது பொருந்தும்.
எனவே வதந்திகளை யாரும் கிளப்பவும் நம்பவும் வேண்டாம். போயஸ் கார்டன் விற்பனைக்கு அல்ல. விரைவில் அங்குக் குடியேறும் எண்ணமும் எனக்கு இருக்கிறது” என ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
மோனிஷா
வேதா இல்லத்தில் தீபா: ஜெயலலிதாவுக்கு மரியாதை!