அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா என பல அணிகளாக அதிமுக சிதறுண்டு கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இந்த தலைவர்கள் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? அணிகள் ஒன்று சேருமா என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.
ஆனால், கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் ஜெயலலிதாவின் நினைவு தினம் என்றைக்கு என்பதே குழப்பத்தில் உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று பிற்பகல் 3.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவுக்கு முதலாம் ஆண்டு திதி கொடுத்த பஞ்சாங்கமும் அந்த அறிக்கையில் இடம்பெற்று இருந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக டிசம்பர் 5-ம் தேதியை ஜெயலலிதாவின் நினைவு தினமாக அனுசரித்து வரும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுக தலைமையக அட்ரெஸ்ஸில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி டிசம்பர் 5-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பங்கேற்கவும் அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓபிஎஸ் உடன் இணைந்து சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய இபிஎஸ் இந்த ஆண்டு தனியாக அங்கு செல்ல உள்ளார்.
அதே நேரத்தில் பன்னீரின் பிளான் என்ன என்பது குறித்து விசாரித்தோம்.
கடந்த வெள்ளிக் கிழமை அன்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிய சசிகலா ஆதரவாளர்களுடன் தனித் தனியாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா நினைவு தினத்தன்று முக்கிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாக அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இபிஎஸ், சசிகலாவுடன் இணையப் போகிறாரா அல்லது ஓபிஎஸ் வருகிறாரா என அவரது ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த சசிகலா, ஜெயலலிதா நினைவு தினத்தன்று நடைபெற உள்ள பேரணியில் சசிகலாவுடன் ஒபிஎஸ்-ம் பங்கேற்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருப்பதாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவு தினம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார். டிசம்பர் 5-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு அண்ணாசாலையில் இருந்து கட்சியினருடன் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக பல அணிகளாக பிரிந்துள்ள நிலையில் இபிஎஸ் கழக இடைக்கால பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ் கழக ஒருங்கிணைப்பாளர் என்றும் சசிகலா கழக பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டு தலைமை கழக லெட்டர் பேடில் தான் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தில் அணிகள் இணைவது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அப்துல் ராஃபிக்
சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்?
FIFA WorldCup : மெக்சிகோவுடன் வெற்றி… சூட்டை கிளப்பும் மெஸ்ஸி
எல்லாம் கட்சி தாவியவுடன் ஓன்று சேர்ந்து என்ன பயன், சேர்ந்து தொழில் பண்ணுங்க