“ஜெயலலிதாவின் டிரைவரே இல்லை, சசிகலாவுக்குதான் டிரைவர்” -தனபால் புகாருக்கு கொந்தளித்த எடப்பாடி

அரசியல்

அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், பன்னீர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் இன்று (ஆகஸ்டு 25) சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பது சட்ட ரீதியாக மீண்டும் நிறுவப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி அதிமுகவினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், சேலத்தில் தனது இல்லத்தின் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

“ இந்தத் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் நேர்மைக்கும் கிடைத்த தீர்ப்பு. எங்கள் கட்சியின் முடிவை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும், தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

கொடநாடு கொலை வழக்கில் தனபால் அளித்த பேட்டி குறித்த கேள்விக்கு,
“ இதுபோன்ற கேள்வியே தவறானது. இது மாதிரி ரோட்ல போறவன் சொல்றதையெல்லாம் ஊடகங்கள், பத்திரிகைகள் போடுவதே தப்பு.

ஆட்சி இருக்கின்றபோது பல சம்பவங்கள் நடந்தது. அதை சட்ட ரீதியாக அதை அணுகி நடவடிக்கை எடுத்தது. இப்போது வேண்டுமென்றே ஆட்சியாளர்கள் திரித்து அவர்களுக்கு சாதகமாக மாற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஏனென்றால் அதிமுகவின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக நடந்தது.

நீங்கள் உணர்ந்துகொள்ளணும். நான் பல முறை சொல்லியாச்சு. மீண்டும் மீண்டும் யாரோ ரோட்ல போறவன் வர்றவன்லாம் சொன்னா…. அவன் எப்படிப்பட்டவன்? ஏற்கனவே பல வழக்குகள்ல சம்பந்தப்பட்டவன்.

இதே ஆட்சியாளர்கள் அவனை விசாரணைக்கு அழைச்சுக்கிட்டுப் போயி 3 மாசம் சிறையில அடைச்சாங்க. இப்ப கூட அவர் நில அபகரிப்பு வழக்குல சிறையில அடைக்கப்பட்டு ஜாமீன்ல வந்திருக்காரு. அவர் எப்படி கொடுப்பாரு?

இன்னொன்று ஜெயலலிதாவின் டிரைவர் என்று யாரும் கிடையாது. அப்படி ஊடகங்களில் இனிமேல் யாராவது போட்டால் நாங்கள் வழக்கு போடுவோம்.
அவர் அம்மாவின் டிரைவரே இல்லை. அவர்  சசிகலா அம்மாவோட டிரைவர். ஒருநாள் கூட அவர் அம்மாவுக்கு டிரைவராக இல்ல. திருப்பித் திருப்பி சொல்றேன்,

ஒரு நாள் கூட அவர் அம்மாவுக்கு ஓட்டுநர் இல்லை. ஆனா, தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்திக்கிட்டிருக்கீங்க” என்று கடுமையாக மறுத்தார்.

இதையடுத்து, “தனபால் மீது புகார் கொடுப்பீங்களா..?” என்று கேட்கப்பட்டபோது,
“அதெல்லாம் வேணாம். நீதிமன்றத்துல வழக்கு நடந்துக்கிட்டிருக்கும்போது அதைப் பத்தி பேசுவது வழக்குக்கு குந்தகம் விளைவிக்கும். அதெல்லாம் வேணாம்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
-வேந்தன்

காவிரி நீர் வழக்கு: மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன? ஸ்டாலின் பேச்சு!

+1
0
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *