ஜெ. நினைவு தினம்: அதிமுகவினர் தனித்தனியாய் அஞ்சலி

அரசியல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல் நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அத்துடன் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தேதி

இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில்,

ஜெயலலிதா டிசம்பர் 4இல் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்று சிலர் நேற்று ஜெயலலிதா நினைவுத் தினத்தை அனுசரித்தனர்.

jayalalitha death anniversary leaders to pay tribute separately

முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி, நேற்று தன் ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதுபோல், முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினார்.

பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுகவினர் தனித்தனியாய் அஞ்சலி

ஆனால், அதிமுக சார்பில் ஏற்கெனவே பின்பற்றியபடி இன்று அவரது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் இன்று தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

jayalalitha death anniversary leaders to pay tribute separately

அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே அமைதி பேரணியாகச் சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை 10.00 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணிக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து அஞ்சலி செலுத்துகிறார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் 11.00 மணிக்கும், வி.கே.சசிகலா காலை 11.30 மணிக்கும், பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இது மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஜெயலலிதா அபிமானிகள், நிர்வாகிகள், கட்சியினர் என ஏராளமானோர் சென்னைக்கு வந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

ஜி20: மோடி தலைமையில் இந்தியா

விறுவிறுப்பாக துவங்கிய குஜராத் இறுதிக்கட்ட தேர்தல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.