Jayalalitha Birthday Eps Ops respect

ஜெயலலிதா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

அரசியல்

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஜெயலலிதா படத்திற்கு இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 76 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதிமுக மருத்துவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு சார்பில் சென்னை லேடி வெலிங்டன் உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இல.சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ் மற்றும் துறை உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோருடன் மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா தோழி சசிகலா, சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா பிறந்த தினம் இன்று. தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும்.

தெலங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை. துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா பிறந்த தினமான இன்று அவர் என் மீது காட்டிய தனி அன்பும், பண்பும் என்றும் என் நினைவில்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒருவர் இறந்தால் துக்கம் அனுஷ்டிக்கணுமா?

பிரதமர் குறித்து அவதூறு: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *