தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என்று புதுச்சேரி தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஆகாத ஜெயலலிதாவின் சேலை, தமிழக சட்டசபையில் இழுக்கப்பட்டது.
அங்கு அமர்ந்திருந்த தி.மு.க-வினர் அவரைப் பார்த்துச் சிரித்தனர்… அந்த ஜெயலலிதாவை தி.மு.க மறந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) வெளியான ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“நிர்மலா சீதாராமன் எதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டு தான் இப்படி பேசியிருக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. அது ஜெயலலிதாவின் நாடகம் என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரியும்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் கூறியது உண்மையில்லை என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு இன்று தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில்,
“தமிழ்நாடு முதல்வர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றை பார்த்தேன். ஜெயலலிதா குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. வாட்ஸ் அப்பை பார்த்து அவர் சொல்லியிருப்பார் என்றும் முதல்வர் சொல்லியிருந்தார்.
இதில் இரண்டு காரணங்களுக்காக நான் மறுப்பு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒன்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உண்மை. அவரை மற்றவர்கள் அடிக்க வந்தது உண்மை. அவர் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக கிழிந்த உடையுடன் சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்ததும் உண்மை.
மற்றொன்று, நிர்மலா சீதாராமன் சட்டமன்றத்தில் ஒரு பெண் நடந்த கொடுமையை, மிக தெளிவாக, அழுத்தமாக, எடுத்து சொன்னதை மிக எளிதாக தமிழக சரித்திரத்தில் சட்டமன்றத்தில் நிகழ்ந்த ஒரு மோசமான நிகழ்வு மறைக்கப்படுகிற அளவிற்கு வாட்ஸ் அப்பில் பார்த்துப் பேசியிருப்பார் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.
இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், அந்த சம்பவத்திற்கு நானே சாட்சி. அப்போது எனது தந்தை குமரிஅனந்தன் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். இந்த சம்பவத்தின் போது சட்டமன்றத்தில் புத்தகங்கள், பொருட்கள் பறந்தது. போடியம் பறந்து வருவதை தடுக்கும் போது கையில் கட்டு போட்டுக் கொண்டதை போலி கட்டு என்று விமர்சித்ததற்கு எக்ஸ்ரே ரிப்போர்ட்டை காண்பித்தது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டிலேயே எனது தந்தை காயப்பட்டார்கள். இப்படிப்பட்ட நிகழ்வு மிக துரதிருஷ்டவசமானது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. ஒரு பெண் தலைவர்களாக நாங்களெல்லாம் வருத்தப்பட்ட நிகழ்வு.
ஆனால் அதனை நடக்கவே இல்லை என்று சொல்லும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல்வர் ஏன் அவ்வாறு சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மதுரை அதிமுக மாநாடு: முக்குலத்து அமைப்புகள் எதிர்ப்பு!
மாணவர் வெட்டப்பட்டதை நேரில் கண்ட உறவினர் மரணம்: நிவாரணம் அறிவிப்பு!