முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை ஆறுமுகசாமி அறிக்கை மூலம் அரசியலாக்கி விட்டனர் என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று (அக்டோபர் 18) சட்டசபையில் வெளியிடப்பட்டது. அதில் ’ஜெயலலிதா – சசிகலா இடையே சுமுக உறவு இல்லாததால், தனது சுயலாபத்துக்காக மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை கிடைக்க விடாமல் சசிகலா தடுத்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா மரணத்தை சர்ச்சையாக்கி, விசாரணை ஆணைய அறிக்கையை அரசியலாக்கி விட்டார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா நேற்று (அக்டோபர் 18) வெளியிட்டிருந்த அறிக்கையில், ”என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
அதற்கு அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையையும் அரசியலாக்கி விட்டார்கள்.

தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மாவின் மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம். ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. நம் அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அம்மா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விதத்தையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தன. உச்ச நீதிமன்றம்கூட இந்த விவகாரத்தில் 30-11 2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது.
அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்த ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது? இறந்துபோன அம்மாவும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன, அதன் உள்நோக்கம் என்ன, இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டு இருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்தவிதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவக் குழுவினரேதான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.
என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பதுதான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்து இருந்தோம்.
இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மாவை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம். வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று அம்மாவுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள்.
ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்: டி.ராஜா மீண்டும் தேர்வு!