அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 4) ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செல்லூர் ராஜூவை அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “இப்போது செல்லூர் ராஜூ வருவார். அவரிடமே இந்த கேள்வியை கேளுங்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஒரு சுமுகமான முடிவை டெல்லி தலைமையும் (பாஜக), அதிமுக தலைமையும் எடுத்து வந்தாலும், மாநில தலைவர் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு,
“ஒரு அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட ஒரு கடுமையான கண்டனத்தை நாங்கள் தெரிவிக்க தவறியதில்லை.
அதிமுகவை தொட்டார் கெட்டார் என்பது அண்ணாமலைக்கும் தெரியும். எனவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு.
செல்லூர் ராஜூவாக இருந்தாலும் சரி, அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி, விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சியில் யாராக இருந்தாலும் சரி, விமர்சனம் செய்தால் எதிர்விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும்.
இதுபோன்ற நிலையை அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது” என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.
மோனிஷா
Comments are closed.