பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் நீதிமன்றம் செப்டம்பர் 25ஆம் தேதி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “2006-11 ஆட்சிக்காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் இந்த வழக்கு தொடரப்பட்டது.
60-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் முறையாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை பொன்முடி நாடினார்.
வழக்கில் வலுவான முகாந்திரம் இருப்பதால் ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் அரசு தரப்பு சாட்சியங்களாக இருப்பவர்களை சரிவர விவரம் கோராமல் இருப்பதால் அதிமுக சார்பில் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள மனுத்தாக்கல் செய்தேன்
அதன்படி மாவட்ட நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் ஆஜரானேன். அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் வாதம் செய்யவில்லை.
இதனால் சாட்சிகளிடம் சரிவர விவரம் பெற முடியாததால் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்கள். திமுக அரசு தப்பிக்க கூடாது என்பதால் இந்த வழக்கில் இணைந்துள்ளேன். இதில் உள்நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்