நெல்லை ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் விசாரணைக்காக இன்று தங்கபாலு, ரூபி மனோகரன் ஆஜராகினர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், இரண்டு நாட்கள் காணாமல் போன நிலையில் கடந்த மே 4ஆம் தேதி கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஜெயக்குமார் தனசிங் நெல்லை மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியானது. இந்த கடிதம் முதன் முதலில் மின்னம்பலத்தில் வெளியானது.
அதைத்தொடர்ந்து அவர் தனது மருமகன் ஜெபா மற்றும் குடும்பத்தினருக்கு எழுதிய மற்றொரு கடிதமும் வெளியானது.
அதில் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் 78 லட்சம் ரூபாயும், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு 11 லட்சம் ரூபாயும் தர வேண்டும். மொத்தம் 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதற்காக தங்கபாலு இன்று (மே 7) நெல்லை வந்தார்.
தொடர்ந்து அவர் களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தங்கபாலுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கபாலு, “ஜெயக்குமாரிடம் பணம் வாங்கி தேர்தல் நடத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியும் இல்லை நானும் இல்லை.
ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில், அவர் எனக்கு பணம் கொடுத்தார் என்றும் அந்த பணத்தை திருப்பி கேட்ட போது அதை சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியதாக எழுதியிருக்கிறார்.
அந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.
எல்லோருக்கும் தெரியும் தேர்தல் காலத்தில் கட்சி தலைமை அல்லது வேட்பாளர்கள் தான் எல்லா செயல்பாடுகளையும் உதவிகளையும் தேவையான நடைமுறைகளையும் செய்வார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல எல்லா கட்சிக்கும் பொருந்தும்.
தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்திருக்கிறேன். இதுவரை என் மீது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யாரும் குற்றம்சாட்டியது இல்லை.
நான் ஜெயக்குமாரிடம் பணம் வாங்க வேண்டிய அவசியத்திலும் இல்லை. பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸின் வேண்டுகோள் படி முதலில், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் எனது பயணம் இருந்தது.
அதன் பிறகு திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்று எனக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் இங்கே வந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தேன். மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பணி என்னுடையதாக இருந்தது. அதை தான் செய்தேன்.
அவரது மரணம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஜெயக்குமார் அவரது கடிதத்தில் என்னைப் பற்றி எழுதியது அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.
அதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் என்னிடம் காட்ட முடியாது.
காவல்துறை கேட்ட பதில்களை சொல்லி இருக்கிறேன். நானே ஒரு வாக்குமூலம் கடிதத்தையும் எழுதி காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன்.
வீடியோ பதிவு எதுவும் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னர் என்னை காவல் ஆய்வாளர் தொடர்பு கொண்டார்.
அவரிடம் எந்தெந்த வழிகளில் என்னால் இந்த வழக்கில் உதவ முடியுமா அதை செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அந்தவகையில் காவல்துறையின் சம்மனை ஏற்று இங்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்தேன்.
எப்பொழுது விசாரணை என்று அழைத்தாலும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்” என்றார்.
தங்கபாலுவை போன்று நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வைத்து விசாரணை நடைபெற்றது.