அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலிமை பெறும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் மாயை கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு ஜெயக்குமார் இன்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம், “சசிகலா, ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்ட தலைவர்களை அதிமுகவில் ஒன்றிணைக்கக்கோரி கட்சியின் சீனியர் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறதே” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,
“ஏற்கனவே இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கருத்து சொல்லிவிட்டார். கட்சியை பொறுத்தவரை இன்றைக்கு எழுச்சியோடு சிறப்பாக வழிநடத்தப்படுகிறது. எனவே, இது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் ஒன்றிணைந்தால் தான் அதிமுக வலிமை பெறும் என்று கதை, திரைக்கதை, வசனம் எழுதப்பட்டு ஒரு மாயை கருத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்புகிறார்கள். அதனால் இந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை.
சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை தொண்டர்களும் பொதுமக்களும் ஏற்றுக்கொள்வார்களா? கட்சி தொண்டர்கள் ஏற்க முடியாத துரோகத்தை செய்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள் இவர்கள். இது தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
சசிகலா கட்சியிலேயே இல்லை. அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி செய்ய முடியும்? சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மூன்று பேரும் இணைந்ததை தான் 90 சதவிகித அதிமுக தொண்டர்கள் இணைந்துவிட்டதாக சசிகலா சொல்கிறார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது கூட கட்சி விவகாரங்களில் பாஜகவை நாங்கள் தலையிட அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும் போது மத்திய அரசு எப்படி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? எங்கள் கட்சி தனித்தன்மையோடு இயங்குகிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை”: உச்சநீதிமன்றத்தில் NTA தகவல்!
சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை: இந்த பங்குகளுக்கு செம்ம டிமாண்ட்!