விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது: ஜெயக்குமார்

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நியாயமாக நடைபெறாது என்பதால், தேர்தலை புறக்கணித்துள்ளோம் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று விக்கிரவாண்டி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “பணபலம், படைபலம் இவற்றைக் கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வல்லமை பெற்ற கட்சி திமுக.

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் நெறிமுறைகள் படுகொலைசெய்யப்பட்டு வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல பட்டியில் அடைத்தார்கள்.

திருமங்கலம் ஃபார்முலாவை போல, பணம் மற்றும் படைபலத்தின் மூலம் ஒரு போலியான வெற்றியை பெறுவதற்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக முயற்சி செய்வார்கள்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஐந்து தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுதொடர்பாக ஊட்டியில் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நிர்வாகிகள் ஆலோசித்து இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதேபோல, இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த நிர்வாகிகள் கலந்தாலோசித்தோம். ஜனநாயக ரீதியாக இந்த தேர்தல் நடைபெறாது என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

ஈரோடு இடைத்தேர்தலின் போது சென்னையிலும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் திமுகவின் அராஜக நடவடிக்கைகள் குறித்து புகார் கொடுத்தோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல தான் விக்கிரவாண்டி தேர்தலிலும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.

இந்த தேர்தலில் போட்டியிடும் பாமகவையோ நாம் தமிழரையோ பெரிய கட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக தான் பெரிய கட்சி. அதனால் தான் மக்களவை தேர்தலில் 1 கோடி வாக்குகள் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு!

சவுக்கு சங்கர் எப்போது விடுதலை ஆவார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel