செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தலின்படி அமைச்சர் நீக்க உத்தரவை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “செந்தில் பாலாஜி மீது திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்துள்ளது. கைதி எண் கொடுக்கப்பட்டபோது செந்தில் பாலாஜி எப்படி அமைச்சரவையில் தொடர முடியும்.
இலாகா இல்லாத அமைச்சருக்காக மக்களுடைய வரிப்பணம் வீணாகிறது. அமைச்சர் பதவியை பாதுகாப்பு கவசமாக செந்தில் பாலாஜி பயன்படுத்தியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் அதிமுக சார்பில் அவரிடம் மனு கொடுத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கி.வீரமணி
“நான்கு மணி நேரத்தில் அதிகாரத்தை உணர்ந்த ஆளுநர்” – அப்பாவு