எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்ட பலகைகளில் அவர் படத்தை மறைப்பது சட்டவிரோதம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சத்துணவு திட்ட பலகைகளில் எம்ஜிஆர் படங்களை அகற்றிவிட்டு முதல்வர் காலை உணவு திட்ட படங்களை வைப்பதாக மாநகராட்சி ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று புகார் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்த போது ஐ.நா.சபையே பாராட்டியது.
அதிமுக ஆட்சி காலத்தில் அக்ஷயாபாத்திரா அமைப்பின் மூலம் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காலை உணவு திட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதே எடப்பாடி தலைமையிலான அரசு தான். சென்னையில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்ற பெயர் பலகையை மறைத்து காலை சிற்றுண்டி திட்டம் பலகை வைக்கப்படுகிறது.
மாநிலத்தின் ஓனர் போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். நாட்டு மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துவதை விட்டுவிட்டு தனது தந்தையின் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்.
எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் முதல்வர் முகமாக உள்ளது. எம்.ஜி.ஆர் படத்தை மறைப்பது சட்டவிரோதம். மீண்டும் படத்தை வைக்காத பட்சத்தில் நாங்களே எழுதுவோம். கடந்த 2 ஆண்டுகளில் அதிமுக கொண்டுவந்த திட்டங்களையே பெயர் மாற்றம் செய்து முதல்வர் திறந்து வைத்துகொண்டிருக்கிறார்.
கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பெயிலில் எடுத்தவர்கள் திமுகவினர். திமுகவினருக்கும் கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என விளக்க வேண்டும். இதற்காக தான் கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை கேட்கிறோம். கொடநாடு வழக்கை காண்பித்து எங்களை பூச்சாண்டி காட்ட முடியாது” என்று தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் நாளை மும்பை பயணம்!