“இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணி உடையலாம்”: ஜெயக்குமார்

Published On:

| By Selvam

வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ, அதே நிலை தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணிக்கும் ஏற்படலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜனவரி 29) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தொகுதி பங்கீட்டு குழு, பிரச்சார குழு, விளம்பர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதேபோல கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தலைமையில் பிரச்சார குழு கூட்டமும், விஜயபாஸ்கர் தலைமையில் விளம்பர குழு கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,” திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் கிடையாது.

வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு என்ன நிலை ஏற்பட்டதோ,  அதே நிலை தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணிக்கும் ஏற்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

பாஜகவுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அண்ணாமலை, பாஜகவை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்துகிறார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, தமிழக மக்களின் நலனை புறக்கணித்தது.  அதேபோல, 17 வருடங்கள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை.

பாஜகவின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பல்வேறு அடக்குமுறைகள், சோதனைகளை கடந்து வீறுகொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது. அதிமுக சிங்கங்கள் வரும் போது அனைத்து ஆடுகளும் ஓடிவிடும்”, என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கையின் காதல் திருமணத்திற்கு… சாய் பல்லவியின் அன்பு பரிசு இதுதான்!

நிர்வாக திறமையின்மையால் கீழ்வெண்மணியில் ஓலை குடிசைகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share