மறைந்த தலைவர்களை அண்ணாமலை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசினார். அப்போது முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர்” என்று பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அண்ணா பற்றி அண்ணாமலை பேசியது சர்ச்சையான நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “1956 இல் நடந்த அந்த சம்பவம் தொடர்பாக தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் என்னிடம் உள்ளன. நான் ஒரு விஷயம் சொன்னால் ஆதாரத்தோடுதான் சொல்லுவேன். என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் யாருடைய அடிமையும் கிடையாது. யாரும் எங்களுடைய அடிமையும் கிடையாது. மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி. சண்முகம் சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார், ஆறு மணிக்கு முன்னர் வேறு மாதிரி பேசுவார்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் மறைந்த தலைவர்களை அண்ணாமலை கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் 145-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் முன்னள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் அண்ணா பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர் சில விமர்சனங்கள் வைக்கும் போது அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியது எங்கள் கடமை. இதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை.
மறைந்த தலைவர்களை கொச்சப்படுத்துவது கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாவுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அண்ணாமலை தனது பெயரில் அண்ணாவை வைத்துக்கொண்டு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்ய கூடாது. அதிமுக தொண்டர்கள் அண்ணாவை விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏற்கனவே ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ததற்கு அதிமுகவினரால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இனிமேல் இதுபோன்ற விமர்சனங்கள் அவரிடமிருந்து வராது என்று எதிர்பார்க்கிறோம். கட்சியை வளர்ப்பதற்கு என்ன வேண்டுமானாலும் அவர் பேசட்டும். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்பது எங்கள் வேண்டுகோள் என்று தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
முப்பெரும் விழாவில் துரைமுருகன் பற்றி உருகிய ஸ்டாலின்
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!