உதயநிதி ஸ்டாலின் மதுரையில் அழகிரியை சந்தித்தது குடும்ப பாசம் தான், இது பின்னாளில் முட்டி மோதி வீதிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பில் 106 கிலோ கேக்கினை இபிஎஸ் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
பின்னர், டிசம்பர் 15ம் தேதி மதுராந்தகம் அருகே கட்சி நிகழ்ச்சிக்காக கொடியேற்றியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செல்லப்பன் குடும்பத்தினருக்கு இபிஎஸ் 5லட்சம் ரூபாயும்,
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த டெல்லி அதிமுக அலுவலக செயலாளர் சந்திரசேகர் குடும்பத்தினருக்கு 10லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன் எழுதிய மக்கள் திலகம் எம்ஜிஆர் மாண்புகள் என்ற புத்தகத்தை இபிஎஸ் வெளியிட்டார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழு வழக்கு மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஒருங்கிணைந்து தனிக்கட்சி தொடங்கட்டும் , அதிமுகவில் மூக்கை நுழைக்க வேண்டாம். அதிமுக குறித்து சசிகலா தேவையில்லாத கருத்து கூற வேண்டாம்.
நானும் இருக்கிறேன் என காண்பித்துக் கொள்வது தான் ஓபிஎஸ் வழங்கம் . சசிகலா ஓபிஎஸ் டிடிவி ஒன்றுப்பட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு, தமிழ்நாடு மக்களுக்கு வாழ்வு இல்லை.
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டத்தை புறக்கணித்தோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல விஷயம், செலவுகள் தவிர்க்கப்படும். 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மக்கள் விருப்பபடி அதிமுக ஆட்சி அமைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திமுகவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது
உதயநிதி ஸ்டாலின் மதுரையில் அழகிரியை சந்தித்தது குடும்ப பாசம் தான். இந்த குடும்ப பாசம் பின்னாளில் முட்டி மோதி வீதிக்கு வரும்” என்று பேசினார்.
கலை.ரா
Comments are closed.