பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று அனுமானத்தின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி பேசியிருக்கிறார் என்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (ஜூன் 7) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “புள்ளிவிவரங்கள் எடுக்கிற ஐபிஎஸ் ஆபிசராக அண்ணாமலை செயல்பட்டாரே தவிர, ஒரு கட்சியின் தலைவராக செயல்படவில்லை.
2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தனித்தும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் களமிறங்கின. அப்போது வாங்கிய ஓட்டை விட இப்போது பாஜக வாங்கிய வாக்கு சதவிகிதம் குறைவு தான்.
எட்டு முறை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லையே.
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்துகொண்டே இருக்கும். அதேபோல தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்து கொண்டே இருக்கும்.
ஆனால், நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல வெற்றி பெற்றுக்கொண்டே இருப்போம். வேலையில்லா திண்டாட்டம், வறுமை குறித்து பேசாமல் சாதியவாதம், மதவாதம், இனவாதம் பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள்.
இந்திய அரசியலமைப்பையே நிர்ணயிக்கக்கூடிய தலைவராக மோடி இருப்பார் என்று அண்ணாமலை பேசினார். ஆனால் இன்றைக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரும் தான் கிங் மேக்கர்.
எங்களைப் பொறுத்தவரை வாக்கு சதவிகிதத்தில் நாங்கள் உயர்ந்திருக்கிறோம். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சியமைக்க முடியும். பாஜகவால் காலூன்ற முடியாது.
மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இனிமேல் அவர் சோலோவாக இயங்க முடியாது. தமிழ்நாட்டில் வார் ரூம் வைத்துக்கொண்டு லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்று பேசமுடியாது.
தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருக்கலாம். அதனால் கூட்டணி விவகாரம் தொடர்பாக இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டில் பேசுகிறார்கள்.
கட்சியை பொறுத்தவரை எழுச்சியாக இருக்கிறோம். ஒன்றிணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும்” என்றார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,
“மாவட்ட செயலாளர்கள் கூட்டம், தலைமை நிலைய செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவான முடிவெடுத்துவிட்டோம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இத்தனை தொகுதிகளை வென்றிருப்போம் என்ற அனுமானத்தில் அடிப்படையில் பேசினால் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”இப்போது வரும் தமிழ் படங்களின் தலைப்பால் வெட்கப்படுகிறேன்” : வைரமுத்து
பதவி காலம் முழுவதும் ஆதரவளிப்போம்: நிதிஷ்குமார் உறுதி!