“திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள்” என திமுகவுக்கு கேள்வியெழுப்பியுள்ளார், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
திமுக அரசுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 19) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, “மூத்த உறுப்பினர்கள் இருக்கும்போது எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளாரே?” என்கிற கேள்விக்குபதிலளித்த ஜெயக்குமார், “இவை அனைத்தும் கட்சி எடுக்கும் முடிவு. கட்சியை பொறுத்தவரையில் எல்லா நலனும் பாதுகாக்கும் வகையில்தான் கட்சி எந்த முடிவாக இருந்தாலும் நிச்சயமாக எடுக்கும். இதில் எந்தவிதமான உள்நோக்கம் யாருக்கும் கிடையாது. அனைவரின் நலனையும் பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். நீங்கள் நினைப்பதுபோல விமர்சனத்திற்கு இல்லாத ஒன்று” எனப் பதிலளித்தார்.
அதுபோல், ஓ.பன்னீர்செல்வம் பேரவை தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு, ”யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். கடிதம் எழுதியவர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா, அதிகாரம் படைத்தவர்களா? அதன்படி பார்த்தால் அதிகாரம் படைத்த அதிமுக என்பது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் கையில்தான் அந்த அதிகாரம் உள்ளது” என்றார்.
இறுதியில், “தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியிருக்கிறதே, அது குறித்து உங்கள் கருத்து” என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “சீரான மின்சாரத்தை வழங்க திமுகவிற்கு வக்கில்லை. எங்கள் ஆட்சியில் தங்குதடையில்லா சீரான மின்சாரத்தை வழங்கினோம். ஆனால் 2014ம் ஆண்டிலிருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை. 2016ம் ஆண்டு கட்டணத்தை உயர்த்தினாலும்கூட சலுகையையும் அளித்தோம். 100 யூனிட் வரை இருந்தால் விலையில்லா மின்சாரத்தை அளித்தோம். திமுகவினர் மத்திய அரசின் மீது பழியைப் போடுகிறார்கள்.
மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். இதற்கு மட்டும் மத்திய அரசு குறித்து பேசும் திமுக, மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைத்ததே. அதற்கு இணையாக நீங்கள் ஏன் விலையை குறைக்கவில்லை. இப்போது ஏழை,எளிய, நடுத்தர மக்கள் எல்லோரும் மின்கட்டண உயர்வால் கடுமையான அளவுக்கு பாதிப்பு அடைகின்ற நிலை இன்றைக்கு உள்ளது. மின் சாதனங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலைக்கு இந்த விடியா அரசு தள்ளியுள்ளது. திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள்” என அவர் தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்