தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் நிறைந்தவை. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் முதலிடம் என்று சொல்வேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 12) அமித் ஷாவுக்கு பதிலளித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை நடந்துகொள்கிறார். தோழமை உணர்வு இல்லாமல், கூட்டணி தர்மத்தை கடை பிடிக்காமல் செயல்படுகிறார். கத்துகுட்டியாக இருக்கும் அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக தேசிய தலைவர் நட்டா அண்ணாமலையை கண்டிக்க வேண்டும்.
கூட்டணி தர்மத்தை மீறும் போது, கூட்டணி தொடர்கிறதா இல்லையா என கேள்வி எழுகிறது.
இதற்கு அமித் ஷாவும், நட்டாவும் பதில் சொல்ல வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அண்ணாமலையின் செயல் கூட்டணியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது.
அண்ணாமலை மாநில தலைவருக்கு தகுதி இல்லாதவர். திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு தோழமை கட்சியை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
பாஜக அதிமுக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல் அண்ணாமலையின் செயல்பாடு இருக்கிறது.
பிரதமராக மோடி வரக் கூடாது என்ற எண்ணம் அண்ணாமலைக்கு இருக்கிறது. கூட்டணிக்குள் இருந்துகொண்டு விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவர் கர்நாடகா போனார். அங்கு பாஜக தோற்றுவிட்டது. ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடகாவில் பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக சொல்கிறார்களே, அதை பற்றி அவர் பேசலாமே. பாஜக உறுப்பினர்கள் 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணம்.
எங்கள் தலைமையில் கூட்டணியில் இருப்பதால் தான் பாஜகவுக்கு இங்கு ஒரு அடையாளம் இருக்கிறது. கூட்டணியை முறிப்பது போல் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
அமித் ஷாவும், நட்டாவும் அவரை கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் கூட்டணி குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும்.
அகில இந்திய அளவில் பாஜக எங்கள் கட்சியோடு சுமுகமாக இருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு டெல்லி தலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ” என்று கூறினார்.
பிரியா
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்: சி.வி.கணேசன்
அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!