ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் பொதுவெளியில் சேர்ந்தாற் போல காட்சியளிக்க ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திரைமறைவில் சந்தித்து கொண்டவர்கள் பொதுவெளியில் சேர்ந்தாற் போல காட்சியளிக்க தற்போதைய ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.
இந்த நாடகத்தை நடத்துவதற்கு ஒரு சப்ஜெட் வேண்டும் என்பதால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்ட நாடகத்தில் கூச்சலிட்டனர்.
கொடநாடு கொலை கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு.
இதனிடையே கொரோனா நோய் தொற்று காரணமாக நீதிமன்றங்கள் செயல்படாததால் வழக்கு நிலுவையில் இருந்தது. இருந்தாலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு டி.ஆர்.பி.சி 313 போடப்பட்டுள்ளது.
ஐஜி தலைமையில் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஐஜி தலைமையில் விசாரணை 90 சதவீதம் முடிந்து 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏஎஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை மேற்கு மண்டல ஐஜி 90 சதவீதம் முடிக்கக்கூடிய ஒரு சூழலில், ஏன் அவரை விட குறைந்த பதவியில் உள்ள ஒரு ஏஎஸ்பி நிலையில் உள்ள அதிகாரிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனுடைய மர்மம் என்ன?
கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளுக்கான விசாரணை கேரள நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது.
இவர்களுக்கு திமுக வழக்கறிஞர்கள் வாதாடி ஜாமீன் பெற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களுக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் தற்போது நாட்டு மக்களின் கேள்வி.
எனவே தான் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டிருந்தார். அதை ஏன் செய்யவில்லை.
வழக்கு விசாரணை விரைந்து நடைபெற்று உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
அம்மா தங்கிய வீடு கோவில் போன்றது என்று ஓபிஎஸ் இன்று ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடு ஜெயலலிதாவிற்கே சொந்தம் கிடையாது. அதை அவர்கள் முகாம் அலுவலகமாக மட்டுமே பயன்படுத்தினார்கள்.
அது தனியாருக்கு சொந்தமானது. அந்த வீட்டை ஆட்டையப்போட வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் மற்றும் டிடிவி இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று நடைபெற்ற செட் அப் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், கழகத்தின் கொடியையும், கழகப் பெயரையும் பன்னீரும், டிடிவி-யும் பயன்படுத்தி உள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும்.
எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டர்களால் நிராகரிப்பட்ட பன்னீரும்,டிடியும் நடத்திய ஆர்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
மோனிஷா
மணிப்பூர் டிஜிபி என்ன செய்து கொண்டிருக்கிறார்?: நேரில் ஆஜராக உத்தரவு!