அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழகத்துக்கான மத்திய அரசின் வெள்ள நிவாரண தொகை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசிய கருத்து சர்ச்சை ஆனது. அதனையடுத்து அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பன் வீடு… ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல” என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அப்பன் என்பது கெட்ட வார்த்தையா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறுகிறார்கள். அந்த பணிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் உண்மையை மூடி மறைத்து விட்டு பணத்தை எதற்காக செலவு செய்தார்கள் என்பதே தெரியவில்லை. இதனால் மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதே போல தென் மாவட்டங்களில் வாய்க்கால், குளங்களை தூர்வாரியிருந்தால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்காது. ஹெலிக்காப்டரில் வந்து உணவு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. கிட்டத்தட்ட நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் சொன்ன கருத்தை தான் நிர்மலா சீதாராமனும் சொல்லி இருக்கிறார்கள்.
அரசியலில் ஒரு நாகரிகம் வேண்டும். நேற்று முளைத்த காளான் உதயநிதி. அந்த நேற்று முளைத்த காளானுக்கு வாய்த்துடுக்கு அதிகம். அதனால் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. கருத்துக்களைப் பொறுப்பான முறையில் சொல்ல வேண்டும். அப்படி சொல்வதற்கு பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி தான்.
தற்போது நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசியவுடன், ‘நான் அந்த மாதிரி எல்லாம் சொல்லவில்லை. ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்று சொன்னேன்’ என்கிறார்.
ஏன் இதே உங்க அப்பா வீட்டு சொத்தா, இல்லை தாத்தா வீட்டு சொத்தா? கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அதே போல ஃபார்முலா கார் பந்தயத்திற்கு 42 கோடி ரூபாய் செலவு செய்து தற்போது பந்தயத்தை தள்ளி வைத்தாகிவிட்டது.
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு கலந்துவிட்டது. அதனுடைய தாக்கம் பழவேற்காட்டில் இருந்து மரக்காணம் வரை உள்ளது. தற்போது எண்ணெய் படர்ந்து விட்டது மீன் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. ஆனால் தாராளமாக மீன் சாப்பிடலாம். எந்த பிரச்சனையும் இல்லை.
அதேபோல எண்ணெய் படிந்த படகுகளை பயன்படுத்த முடியாது. ஒரு படகு 2 லட்சம் ரூபாய். முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு ரூ.2 லட்சமும் பகுதியாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.1 லட்சமும் கொடுங்கள். ஆனால் படகுக்கு 10 ஆயிரம் ரூபாய். குடும்பத்திற்கு 12 ஆயிரம் ரூபாய். எப்படி இது கட்டுப்படியாகும். இந்த நிவாரணம் அறிவித்தது போதாது. அதையும் அனைவருக்கும் கொடுக்கவில்லை. அதனால் மீனவர்கள் போராடுகிறார்கள்.
அரசு சிபிசிஎல் நிறுவனத்திடம் பேசி நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மீண்டும் வாக்குச்சீட்டு: ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் விசிக!
IPL 2024: நான் வந்துட்டேன்னு சொல்லு… மும்பை கேப்டனாக நீடிக்கும் ஹர்திக் பாண்டியா?