எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் : ஜெயக்குமார் எச்சரிக்கை!

Published On:

| By Monisha

pour paint on MGR statue

எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை, காலிங்கராயன் முதல் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை கடந்த 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை மீது இன்று (ஆகஸ்ட் 2) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி சென்றுள்ளனர்.

எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய விவகாரம் பற்றி அறிந்ததும் அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் அளித்தார். தொடர்ந்து சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து, அதில் பதிவாகியுள்ள வீடியோவின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பெயிண்ட் ஊற்றப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை துணியால் துடைத்து சுத்தம் செய்தார். பின்னர் எம்.ஜி.ஆர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தார்.

pour paint on MGR statue

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்,  “ எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தவுடன் காவல்துறை ஆணையரிடத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக இதை செய்தவர்கள் எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சொன்னோம்.

காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். கைதானவர் தற்போது எச்1 காவல் நிலையத்தில் உள்ளார். கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர் பெயிண்டை ஊற்றினாரா? அவருக்கு பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.

பெயிண்டை அதிகாலை 12.39-க்கு ஊற்றியுள்ளதாக எனக்கு சிசிடிவி காட்சிகளை அனுப்பியுள்ளார்கள். அவரிடம் பெயிண்டை ஊற்ற சொல்லி தூண்டியது யார்? பெயிண்டை கொடுத்து அனுப்பியது யார்? என்பதை விசாரணை செய்து திரைமறைவில் இருக்கிறவர்களை கண்டறிய வேண்டும்.

உலகமே போற்றும் புரட்சி தலைவர் மீது பெயிண்டை ஊற்றினால் அவருடைய புகழ் மற்றும் சாதனைகளை மறைத்து விட முடியுமா? அவரை அசிங்கப்படுத்தி விட முடியுமா?

ஒருவரை கைது செய்தது மட்டும் போதாது. யாரெல்லாம் இதற்கு பின்னால் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு மிகப்பெரிய போராட்டம் செய்யக்கூடிய ஒரு நிலைமை நிச்சயமாக ஏற்படும்.

எம்.ஜி.ஆர். மறைந்து 35 ஆண்டுகள் ஆகிறது. 35 ஆண்டுகளாகியும் அவருடைய சிலையை பார்த்தே திமுக பயப்படுகிறது என்றால் அதை விட கோழைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ” என்று ஆவேசமாக பேசினார் ஜெயக்குமார்.

மோனிஷா

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை “ஹர்காரா”

அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?

ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க என்.எல்.சி.க்கு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share