எடப்பாடி நிகழ்ச்சியில் பங்கேற்காத செங்கோட்டையன்… விளக்கமளித்த ஜெயக்குமார்

Published On:

| By Selvam

கோவையில் நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்ற அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்பதற்காக தான் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார். Jayakumar clarifies Sengottaiyan Boycott

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அஞ்சப்பள்ளியில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் அச்சிடப்பட்டும் அவர் பங்கேற்கவில்லை.

இதுதொடர்பாக இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியின் அழைப்பிதழ் மற்றும் டிஜிட்டல் பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், செங்கோட்டையன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஜெயக்குமார், “அத்திக்கடவு – அவிநாசி திட்டம் என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி தான். 80 சதவிகித பணிகள் அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நிறைவடைந்தது. மீதமுள்ள 20 சதவிகித பணிகளை ஆளும் திமுக அரசு மெத்தனமாக நிறைவேற்றியது.

உடனடியாக திட்டத்தை நிறைவேற்றினால், அதிமுகவிற்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற காரணத்தினால் கிடப்பில் போட்டு மூன்று வருடத்திற்கு பிறகு திமுக நிறைவேற்றியிருக்கிறார்கள். எனவே, அந்த திட்டம் நிறைவேறுவதற்கு காரணம் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் தான்.

அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பில் அனைத்து கட்சிகளையும் சார்ந்த விவசாயிகளும் இருக்கிறார்கள். இதில் ஒரு அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்கிற வகையில் தான் பாராட்டு விழா நடைபெற்றது” என்று தெரிவித்தார்.

“அதிமுகவில் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று ரொம்ப டீசண்டாக ஒதுங்கிவிட்டேன்” என்று கள ஆய்வு கூட்டத்தில் கோகுல இந்திரா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “உள் அரங்கில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கோகுல இந்திரா வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் மேடையிலோ பொது இடங்களிலோ பேசவில்லை. கட்சிக்காரர்கள் மத்தியில் தான் பேசியிருக்கிறார். எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அவருடைய மனக்குறை எதுவாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியிடம் முறையிடலாம்” என்று தெரிவித்தார். Jayakumar clarifies Sengottaiyan Boycott

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share