“திமுகவினர் என்மீது போட்ட பொய் வழக்கில், மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இந்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சியின் 49வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்குள் அத்துமீறி நுழைந்த நரேஷ் என்பவரை சட்டையைக் கழற்றவைத்து அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மறுநாள் பிப்ரவரி 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இது மனித உரிமை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று (ஜூலை 19) நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், “திமுக அரசு என்மீது பொய்வழக்கு சித்திரவதை செய்தது. உச்சநீதிமன்றம் ஒருவரைக் கைது செய்யவேண்டும் என்றால், அதற்கான வழிகாட்டு முறைகளை அளித்துள்ளது. அந்த உச்சநீதிமன்ற விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, என்னை சாப்பிடவிடாமல், மருந்து உட்கொள்ளவிடாமல், உடையை மாற்றவிடாமல், எங்கு கொண்டுசெல்கிறோம் என்று சொல்லாமல் சென்னை முழுவதும் அலையவைத்து நள்ளிரவு பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டேன். இது அத்துமீறிய செயல். இதில், மனித உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். இதுபோல மத்திய உள்துறைக்கும் புகார் அளித்துள்ளேன். அவர்கள் அறிக்கை கேட்டுள்ளனர்.

‘இந்த புகார்மீது தமிழக உள்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று எனக்கும், மத்திய உள்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என டிஜிபிக்கும், கமிஷனருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கான பதில் இன்னும் வரவில்லை. இங்கே மனு அளித்ததன் அடிப்படையிலே சாட்சிகளை இன்று பதிவு செய்துள்ளார்கள். நடந்த அனைத்தையும் இங்கு தெரிவித்துள்ளேன்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், முறையாக தகவல் தெரிவிக்காமல் கைது நடவடிக்கையில் ஒரு அத்துமீறல் நடந்துள்ளது. பொய் வழக்கு போட்டுள்ளார்கள் என்று உரிய காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளேன். இதில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளேன். 91ம் ஆண்டிலிருந்து அரசியலில் இருந்து வருகிறேன். இதுவரை எந்த ஒரு வழக்கும் என்மீது கிடையாது.
இப்படி நான் பொதுவாழ்க்கையில் இருக்கும் நிலையிலே வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு,சமூகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கே இதுபோன்ற நிலை என்றால், ஒரு சாதாரண குடிமகனுக்கு எந்த அளவுக்கு நிலைமை இருக்கும் என்பதை பாருங்கள். எனவே ஒரு படிப்பினையை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம் மற்ற யார் மீதும் அவர்கள் கைவைக்கக் கூடாது. கழகத்தினர் மீது பொய்வழக்கு போடக்கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன்மீது மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ஜெ.பிரகாஷ்