ஒரே நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த இரு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில், மின் கட்டண உயர்விலிருந்து மக்களைத் திசை திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்.இ.டி பல்பு கொள்முதல் செய்ததில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும்,
வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய இடங்களிலும் காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது.
ஒரே நேரத்தில் அதிமுகவின் இரு முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
வரலாறு காணாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மக்களை திசை திருப்பவே சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியிருக்கின்றனர். சி.விஜயபாஸ்கர் வீட்டில் இரண்டாவது முறையாக இன்று 16 இடங்களில் சோதனை நடக்கிறது.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. போதை பொருள் சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர்.
சர்வ சாதாரணமாக கொலை நடக்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையாகிறது. தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் பேருந்து கட்டணம், சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது இந்த அரசு.
இந்நிலையில் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி சோதனை நடத்தி வருகின்றனர்” என்று திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
பிரியா
மூன்றாவது முறையாக விஜிலன்ஸ் பிடியில் எஸ்.பி.வேலுமணி