நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில், சமாஜ்வாதி கட்சி தலைவரும், நடிகையுமான ஜெயா பச்சன் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இடையே நடந்த காரசாரமான வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரிக்கும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 9) பேசிய கார்கே, ’தன்னை குறித்து பாஜக எம்பி கன்ஷ்யாம் திவாரி கூறிய அவதூறு கருத்துகளை அவை பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கோரினார். இதனையடுத்து ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.
அதற்கு பதிலளித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், ”மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கன்ஷ்யாம் திவாரி ஆகியோருக்கு இடையே நடந்த வார்த்தை மோதலைத் தொடர்ந்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது திவாரி கார்கேவை சமஸ்கிருதத்தில் பாராட்டியதை நாங்கள் கண்டறிந்தோம். அது அவமரியாதை இல்லை” என்று பேசினார்.
பாஜக எம்.பி திவாரிக்கு ஆதரவாக தங்கர் பேசியதை கேட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் திவாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதற்கு தங்கர், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது அவையில் பேசிய ஜெயா பச்சன், “நான் ஒரு கலைஞன். உடல் மொழி மற்றும் அதன் அர்த்தம் எனக்கு நன்றாக தெரியும். கார்கே – திவாரி விவகாரத்தில் உங்களது தொனியும், பாஜக எம்.பிக்களின் நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என குற்றஞ்சாட்டினார்.
அதற்கு தங்கர், “எனக்கு யாரும் பள்ளிப்பாடம் நடத்த வேண்டாம். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவை நடவடிக்கையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மூத்த எம்.பி.க்கு மாநிலங்களவை தலைவர் நற்பெயரைக் குறைக்கும் உரிமம் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நான் மற்றவர்களின் ஸ்கிரிப்ட் மூலம் செல்லவில்லை. என்னிடம் சொந்த ஸ்கிரிப்ட் உள்ளது. நான் வேறு யாராலும் இயக்கப்படவில்லை, ”என்று கூறினார்.
தங்கரின் இந்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியாகாந்தி தலைமையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுடன் வெளிநடப்பு செய்த ஜெயா பச்சன், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “ஜெகதீப் தங்கர் பயன்படுத்திய தொனிக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நாங்கள் பள்ளி மாணவர்கள் அல்ல. அவர் பேசும் தொனியில் நான் வருத்தமடைந்தேன், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. இதை எப்படி அவரால் செய்ய முடியும்? அவரது பேச்சே சபையில் கேட்கவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை அவர்கள் (தங்கர் மற்றும் பாஜக எம்.பிக்கள்) பயன்படுத்துகிறார்கள்” என ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.
சமீபகாலமாக ஜெயா பச்சனை அவரது கணவர் அமிதாப் பச்சன் பெயருடன் இணைத்து நாடாளுமன்றத்தில் அழைத்து பேசி வருகின்றனர்.
கடந்த 5ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ஜெயா அமிதாப் பச்சன் என்று ஜெகதீப் தங்கர் அழைத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஜெயா, “சார், அமிதாப்பின் அர்த்தம் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். அதாவது, எனது திருமணம் மற்றும் எனது கணவருடனான தொடர்பு மற்றும் அவரது சாதனைகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இதுவரை இல்லாத வகையில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இப்போது எனது பெயரை கணவரின் பேருடன் அழைத்து புதிய நாடகம் நடத்தி கொண்டிருக்கிறீர்கள்” என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
“அர்ஷத் நதீமும் என்னுடைய மகன்தான்”… நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி உருக்கம்!