“உதயச்சந்திரன் ஐஏஎஸ் மிரட்டல்” : ஜவகர்நேசன் விலகல்!

அரசியல்

தமிழக உயர்நிலைக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு, தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்று கூறி இந்த குழுவில் இருந்து விலகுவதாக ஜவகர் நேசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மே 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“புதிய கல்விக் கொள்கை 2020ஐ மறுதலித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மாநிலத்திற்கு என்ற தனித்துவமான கல்விக் கொள்கையின் அவசியம் எனும் லட்சிய நோக்கத்தை உணர்த்தியது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராக முக்கிய பங்கு ஆற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த அரசுக்கும் மக்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நிலையில், ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும் முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலை கல்வி குழு தடுமாறி கொண்டிருக்கிறது.

இந்த காரணத்தால் உயர்நிலைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் எனது பணியை தொடர்ந்து செய்வதற்கும் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குவதற்கும் மென்மேலும் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதன் விளைவாக தேசிய கொள்கை 2020ன் அடியைபின்பற்றி மாநில கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

எனவே இந்த உயர்நிலைக் குழு உருவாக்கம் மாநிலக் கொள்கை பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார் மைய, வணிக மைய, கார்ப்பரேட் சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக் கொள்கை 2020ன் மற்றொரு வடிவமாக இருக்கும்.

இந்நிலை நீடித்தால் அது தமிழக மக்களின் விருப்புணர்வுகளுக்கும் தமிழ் சமூகத்தின் உயரிய விரும்பியங்களுக்கும் பெரும்பாலும் எதிராக கல்விக் கொள்கையின் விளைவுகள் இருக்கும் என அஞ்சுகிறேன்.

அரசாணை எண் 98 குழுவிற்கு பணித்துள்ள ஆய்வு வரையறைகளை நீர்த்துப்போக செய்யும் நோக்கத்துடன் உயர்நிலைக் குழு செயல்பட்ட போதும் நான் குழுவின் கொள்கை உருவாக்கும் நடைமுறையையும் தேவையான இலக்குகளை அடையும் திட்டங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் எனது பங்களிப்பினை தொடர்ந்தபடியே இருந்தேன்.

எனினும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளை கூறி என்னை அச்சுறுத்தி அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார்.

இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும் பாதுகாப்பாற்ற நிலையையும் கடந்த சில மாதங்களில் குழு தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட, அவை அனைத்தையும் எதிர்வினை துளியேனும் மாற்றாமல் புறந்தள்ளும் போக்கை கடைபிடித்தார்.

தலைவர் இதுவரை இந்நிகழ்வு குறித்து என்னுடைய கருத்தை கேட்கவில்லை. இதில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அவர் தரவில்லை. மொத்தமாக அதிகார வர்க்கத்தின் தலையீடுகளிலிருந்தும் குழுவிற்குள் செயல்பாட்டையும் முடக்கும் நடவடிக்கைகளில் இருந்தும் குழுவின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பாதுகாக்க குழுவின் தலைமை தவறிவிட்டது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

தீர்வினை வேண்டி குழுவின் தலைவரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கேட்கவே படாமல் போனதால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடமும் கடிதம் சமர்ப்பித்தேன.

கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கபெறவில்லை. இந்த சூழலை சரி செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று களைப்புற்று உண்மையையும் ஜனநாயகமும் ஆற்ற குழுவின் சூழலும், அதிகாரவர்க்கத்தின் தலையீடுகளும் அச்சுறுத்தலும் என் செயல்களை முடக்க பெரும்பாலும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இனிமேலும் குழுவில் நீடிப்பது பொருள் அற்றது என்று உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

அண்ணாமலைக்கு எதிராக இளைஞரணி: உதயநிதி சிக்னல்- வெளிப்படுத்திய ஜோயல்

தேர்வுக்குழு உறுப்பினர்களின் விவரம்: தயாரிப்பாளர் அறிவுரை!

jawaharnesan Quit from Higher Education Board
+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *