ஜவஹர்லால் நேரு: மோடியின் துர்க்கனவு!

Published On:

| By Kavi

– ரவிக்குமார்  எம்.பி.

நரேந்திர மோடி இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்கிறார். இதன் மூலம் ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திய சாதனையை அவரும் எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த நாளிலிருந்து  நரேந்திர மோடியின் உறக்கத்தைக் கலைத்துக்கொண்டிருந்த ஒரு துர்க்கனவு – ஜவஹர்லால் நேரு. தனது தோல்விகளை மறைப்பதற்கு ஜவஹர்லால் நேருவை அவதூறு செய்வதை  மோடி ஒரு தந்திரமாகக் கையாண்டு வந்தார்.

நேருவும் மோடியும் ஒன்றா?

அதே நேரத்தில் மோடியும் நேருவைப் போல் மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்று பாஜகவினர் திரும்பத் திரும்ப சொல்லி வந்தார்கள். இப்போது அது நடந்துவிட்டது. மூன்றாவது முறை பிரதமர் ஆகிவிட்டதால் மோடியும் ஜவஹர்லால் நேருவும் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியுமா?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றவர் நேரு. சுமார் 9 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார்.  மோடி தற்போது இருக்கும் பாஜக சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவாகவில்லை. ஆனால் அதன் தாய் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். இருந்தது, இந்து மகா சபா இருந்தது. அந்த அமைப்புகள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதில்லை. அவர்களும் தேசியம்தான் பேசினார்கள் என்றாலும் காங்கிரஸ் பேசியது இந்திய தேசியம், ஆர்.எஸ்.எஸ் பேசியதோ இந்து தேசியம்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவார் காங்கிரஸின் நிலைப்பாடுகளுக்கு நேர்மாறான நிலைப்பாடுகளையே எடுத்தார். இரண்டாவது உலகப் போர் மூண்டபோது அதில் பிரிட்டன் எடுத்த நிலைப்பாட்டை விமர்சித்து காங்கிரஸ் கட்சி மாகாண அமைச்சரவைகளிலிருந்து வெளியேறியது. அப்போது இந்து மகா சபா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அமைச்சரவையில் பங்கேற்க முன்வந்தது. எனவே, நேருவின் தியாகங்களை நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியாது.

நேருவின் பட்டமும், மோடியின் கல்விச் சான்றிதழும்!

இயற்கை விஞ்ஞானத்தில் ஹானர்ஸ் பட்டமும், சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டமும் பெற்றவர் நேரு. ‘பண்டிதர்’ என அறியப்பட்டவர். சமகால அரசியல் நிலவரம் குறித்து தி இந்து, தி இண்டிபெண்டண்ட், நேஷனல் ஹெரால்டு, பாம்பே க்ரானிக்கிள் உள்ளிட பல முக்கியமான ஆங்கிலபத்திரிகைகளில் எராளமான கட்டுரைகளை எழுதியவர். உலக வரலாறு குறித்தும், இந்திய வரலாறு குறித்தும் உலகப் புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். ஆனால்,  நரேந்திர மோடியோ, ‘ இந்தியப் பிரதமர் ஒருவரின் கல்விச் சான்றிதழின்மீது சந்தேகம் கிளப்பப்பட்டு அது உயர்நீதிமன்றம் வரை சென்றது’ என்ற சிறப்பைப் பெற்றவர். எனவே அந்தத் தளத்திலும் இருவரையும் நாம் ஒப்பிட முடியாது.

ஜவஹர்லால் நேரு மூன்றாவது முறை பிரதமர் ஆன போது காங்கிரஸ் கட்சி 361 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் நரேந்திர மோடிக்கு இந்தத் தேர்தலில் பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. பாஜக வென்றிருப்பது வெறும் 240 தொகுதிகள் மட்டுமே. அது மட்டுமின்றி நரேந்திர மோடி பெற்ற வாக்கு வித்தியாசமும் குறைந்துவிட்டது.

சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு

1962 இல் ஜவஹர்லால் நேரு மூன்றாவது முறை பிரதமர் ஆன போது காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்தது. போர்த்துக்கீசிய காலனியாக இருந்த கோவாவை இந்தியாவோடு நேரு வெற்றிகரமாக இணைத்தார் என்றாலும், தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால் சீனாவுடனான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டு இரண்டு நாடுகளும் ஒரு யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

அந்த நிலையில் தான் 361 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு மூன்றாவது முறையாக ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நேருவின் அரசு எதிர்கொண்டது. அவரது சாதுரியமும் துணிச்சலும் மிக்க அணுகுமுறையால் சீனத் துருப்புகள் தனது பழைய இடத்துக்கே திரும்பிச் சென்றன.

அப்போது பின்வாங்கிச் சென்ற சீனத் துருப்புகள்  நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் துணிச்சல் பெற்று மீண்டும் ‘இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து முகாம்களை அமைத்துள்ளன’ என பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமியே குற்றம் சாட்டுகிறார். ஆனால், பிரதமர் மோடியோ சீனாவைப் பற்றியும் அது ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளைப் பற்றியும் பேசவே தயங்குகிறார்.

பாராளுமன்றம் என்பது கலந்து பேசுவதற்கும் உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான ஒரு இடம் என்று புரட்சியாளர் அம்பேத்கர் வர்ணித்தார். “பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளும் தரப்பு எதிர்த் தரப்பு என இரண்டும் வலிமையோடு இருக்க வேண்டும், அரசை நோக்கி சுதந்திரமாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும். விமர்சனங்களை வைக்க வேண்டும். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்” என அம்பேத்கர் வலியுறுத்தினார். நேருவின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

நாடாளுமன்றத்தின் மாண்பைக் காப்பதில் எப்போதும் கவனமாக இருந்தவர் நேரு. எதிர்க்கட்சிகளுடைய கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்தவர். “எதிர்க்கட்சிகள் ஆட்சியாளர்களை விமர்சிக்கத் தயங்கக் கூடாது, விமர்சிப்பதோடு நல்ல ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் மூன்றாவது முறை பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதை வரவேற்ற நேரு , ‘குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி ஆட்சியை சீராய்வுக்கு உட்படுத்துவது அவசியம்’ என்று குறிப்பிட்டார்.

மணிப்பூர் கலவரத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு அனுமதிக்கப்படாததால் 2023 ஆகஸ்டில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தன.

பொதுவாக நாடாளுமன்றத்துக்கே மோடி வருவதில்லை. அவரை அவைக்கு வரச் செய்வதற்காகவே எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்தன. அந்த விவாதம் நடந்த நேரத்தில் அவர் அவையில் இல்லை. தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசுவதற்காக மட்டும்தான் மோடி அவைக்கு வந்தார். தனது உரையில் எதிர்க்கட்சியினரை எள்ளி நகையாடினார். சுமார் 2 1/2 மணி நேரம் அவர் பேசியபோதிலும் மணிப்பூரைப் பற்றி 10 நிமிடம்கூட பேசவில்லை.

சபாநாயகருக்கு உரிய மரியாதையை அளித்தவர் நேரு. சபாநாயகரிடம் பேச வேண்டுமென்றால் அவரது அறைக்குச் சென்று சந்திப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், மோடியின் ஆட்சியில் சபாநாயகருக்கு மட்டுமல்ல சபைக்கும் கூட மதிப்பில்லாமல் போய்விட்டது. 10 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்றம் என்ற அமைப்பே பலவீனப்படுத்தப்பட்டு மதிப்பில்லாமல் ஆக்கப்பட்டு விட்டது.

நேருவின் வெறுப்பு – மோடி நட்பு!

1936 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நேருவின் மனைவி காலமானார். அதன் பின்னர் சில நாட்கள் நேரு ஸ்விட்சர்லாந்தில் தங்கியிருந்தார். இந்தியா திரும்பும் வழியில் ரோமில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது இத்தாலியின் அதிபராக இருந்த முசோலினியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அவரை சந்திப்பதற்கு முசோலினி மிகவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் நேரு அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெர்மனியில் இருந்த நாஜி அரசாங்கம் தங்களது நாட்டுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது. அதையும் நேரு நிராகரித்துவிட்டார். பாசிசம், நாஜிசம் ஆகிய கொள்கைகள் மீதும், ஹிட்லர், முசோலினி ஆகிய கொடுங்கோலர்கள் மீதும் அவருக்கு இருந்த வெறுப்பை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், நரேந்திர மோடியோ உலகில் உள்ள வலதுசாரித் தலைவர்களையும் சர்வாதிகாரிகளையும் தேடித் தேடிச் சென்று சந்தித்தார். காஸாவில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகளைப் படுகொலை செய்த இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும், வெள்ளை நிறவெறியின் ஆதரவாளரான மேனாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் மோடியின் நேசத்துக்குறிய நண்பர்கள்.

நேரு தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் சென்றார். அவரது ஆட்சிக் காலத்தில் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் லட்சக் கணக்கானோர் வேலை வாய்ப்பைப் பெற்றனர். ஆனால், நரேந்திர மோடியோ லாபம் ஈட்டும் 23 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டார். அவரது 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட அவர் உருவாக்கவில்லை.

அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு பல்வேறு கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. ‘ஒன்றிய அரசமைப்பு சட்டக் குழு’ ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தியாவில் மக்களவை மாநிலங்களவை என்ற இரண்டு அவைகள் கொண்ட நாடாளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை அந்தக் குழு தான் முடிவு செய்து பரிந்துரைத்தது.

மக்களவையைப் போலவே மாநிலங்களவையும் முக்கியத்துவம் கொண்டது என்பது நேருவின் உறுதியான கருத்தாகும். 1953 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இது தொடர்பாக ஒரு சிக்கல் எழுந்தது. வருமான வரி (திருத்த) மசோதா 1952, மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. அதை பண மசோதா ( money bill) என்று மக்களவை சபாநாயகர் சான்று அளித்திருந்தார்.

ஆனால் மாநிலங்களவையில் இருந்த சில உறுப்பினர்கள் அது பண மசோதா அல்ல மாநிலங்களவையின் அதிகாரத்தைப் பறிப்பதற்காகவே அதைப் பண மசோதா என்று சபாநாயகர் சான்றளித்திருக்கிறார் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதில் குறுக்கிட்டுப் பேசிய ஜவஹர்லால் நேரு ” நமது அரசமைப்புச் சட்டத்தில் இரண்டு அவைகள் அவற்றின் முழுமையான அதிகாரங்களோடு செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றை மேலவை என்றும் இன்னொன்றை கீழவை என்றும் சொல்வது சரியல்ல.

நாடாளுமன்றத்தில் நேருவும் மோடியும்

ஒவ்வொரு அவையும் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு முழு அதிகாரத்தோடு செயல்படுகின்றன. இவற்றில் எதுவொன்றுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டம் தான் இறுதி அதிகாரம் கொண்டது. நிதி சம்பந்தமான சில விஷயங்கள் மக்களவையின் வரம்புக்கு உட்பட்டவை. அவற்றைத் தவிர்த்து இரண்டு அவைகளையும் அரசமைப்புச் சட்டம் இணையாகவே கருதுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே நிதிநிலை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்யும் பொது கணக்குக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பிரச்சனை எழுந்தது. அந்தக் குழுவில் மாநிலங்களவையிலிருந்து ஏழு உறுப்பினர்களும், மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை பரிந்துரைத்தது. ஆனால் அதை மக்களவை நிராகரித்தது. அது விதிகள் குழுவுக்கு ( Rules committee) அனுப்பப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொது கணக்குக் குழுவில் மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று விதிகள் குழு பரிந்துரைத்தது. இந்தச் சூழலில் ஜவஹர்லால் நேரு ஒரு தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்தார் ” மாநிலங்களவையிலிருந்து ஏழு உறுப்பினர்கள் பொது கணக்குக் குழுவில் இடம் பெறுவதற்கு மக்களவை ஒப்புதல் அளிக்கிறது” என்பதே அந்தத் தீர்மானம். அதற்கு ஒட்டுமொத்த அவையும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது பேசிய நேரு ” இரண்டு அவைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். சிக்கலான பிரச்சனைகளைக் கூட எப்படி சுமூகமாக கையாள முடியும் என்பதில் உலக நாடுகளுக்கும், பிற நாடாளுமன்றங்களுக்கும் நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து உறுப்பினர்களை சமாதானப்படுத்தினார்.

அதன் பின்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி மாநிலங்களவைக்கு உரிய முக்கியத்துவத்தை நேரு அளித்தார். பண மசோதா என்ற பெயரில் மாநிலங்களவையைக் கடந்து செல்லும் தந்திரத்தை அவர் ஏற்கவில்லை.

ஆனால் நரேந்திர மோடி அரசோ பண மசோதா அல்லாத பல மசோதாக்களை பண மசோதா என்ற பெயரில் நிறைவேற்றியது. ஆதார் சட்டம், 2016, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை சட்டம், 2010 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்து அவற்றை பண மசோதா என்ற பெயரில் நிறைவேற்றியது. ஏனென்றால் மாநிலங்களவையில் மோடி அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. அங்கு இந்த மசோதாக்கள் தோற்கடிக்கப்படும் என்பதால் இந்த தந்திரத்தை அது கையாண்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. அதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இப்படி எந்தவொரு அம்சத்திலும் ஜவஹர்லால் நேருவோடு ஒப்பிடுவதற்குத் தகுதியானவராக நரேந்திர மோடி இல்லை. மூன்றாவது முறை அவர் பிரதமர் ஆகியிருக்கலாம், ஆனால் ஒருபோதும் அவர் நேரு ஆகிவிடமுடியாது.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

11ஆவது முறையும் தோல்வியை வரவு வைக்கணுமா?: ஓபிஎஸ் கேள்வி!

இத்தாலியில் பிரதமர் மோடி : உலகளாவிய சவால்கள் குறித்து விவாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share