முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிற வகையில் ரூ.7,108 கோடி மதிப்பில் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. அதேபோல, தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை – 2023-க்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து ஸ்டாலின் வருகிற ஜனவரி 28-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தசூழலில், முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக ஜனவரி 23-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜனவரி 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை அறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 9-ஆம் தேதி கூடியது. இந்த ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்தநிலையில், ஜனவரி 23-ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை: கருணாநிதி எம்.எல்.ஏ
பிரதமர் வருகை: சென்னை, திருச்சி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!