சென்னை தாம்பரம் அடுத்த படப்பையில் மார்ச் 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் ஜல்லிக்கட்டு நடுத்துவது குறித்து இன்று(ஜனவரி 10)செய்தியாளர்களிடம் பேசினார்.
“திமுக தலைவர் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
தாம்பரம் அடுத்த காஞ்சி வடக்கு மாவட்ட திமுகவினர், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 500 காளைகள் பங்கேற்க உள்ளன. முதலமைச்சர் பெயரில் ஒரு காளை என 501 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்யப்படும். முறையாக மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர், பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடத்துபவர்களை ஒழுங்குப்படுத்தி பார்வையாளர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
முதல்பரிசு பெறும் காளைக்கு கார், காளை பிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள், மற்ற அனைத்து வெற்றி பெறும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் உண்டு”என கூறினார்.
அப்போது சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் குறித்தும், மாணவர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது அவமானமாக உள்ளது.
ஆட்சியாளர்கள் என்பதால் அமைதி காப்பதாகவும், தமிழ்நாடு எனும் உணர்வு பற்றி பேசியதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
கலை.ரா