ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Published On:

| By Prakash

உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை இன்று (நவம்பர் 23) நடைபெற இருக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு 2017ஆம் ஆண்டு தடை விதித்தது.

மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.

தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

jallikattu case today supreme court enquiry

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நவம்பர் 23 (இன்று) தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்து, ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 23இல் விசாரணை தொடங்கும் என உத்தரவிட்டனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன், தம்மையும் இந்த வழக்கில் சேர்க்க இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

jallikattu case today supreme court enquiry

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன், ஜல்லிக்கட்டு தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில், ‘உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை தமிழக அரசு சரிவர கையாளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்கப்படலாம். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி ஜல்லிகட்டு தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வழிவகை செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!

வசூலை வாரிக்குவித்த காந்தாரா: எத்தனை கோடி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel