“மோடி என்றால் ஊழல்”- குஷ்புவுக்கு என்ன தண்டனை? கொதிக்கும் காங்கிரஸ்

அரசியல்

ராகுல் காந்தியை விட கடுமையாக மோடியை விமர்சித்த குஷ்புவுக்கு என்ன தண்டனை என்று காங்கிரஸார் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இது தொடர்பாக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புருனேஷ் மோடி தொடுத்த அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நேற்று (மார்ச் 24 ) ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது பா.ஜ.கவில் இருக்கும் நடிகை குஷ்பு 2018 ஆம் ஆண்டு மோடியை விமர்சித்துப் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ,’மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை, குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியா?’என பலரும் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மோடி இங்கே.. மோடி அங்கே.. எங்கும் மோடி.. என்ன இது? ஒவ்வொரு மோடியின் பின்னாலும் ஊழல் இருக்கிறது. மோடி என்றால் ஊழல். மோடியின் பெயரை ஊழல் என்று மாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார். அதாவது ராகுல் காந்திக்கு முன்பே மோடியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் குஷ்பு.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 2020 ஆம் ஆண்டு பாஜக வில் சேர்ந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குஷ்புவின் இந்த ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பாஜகவுக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங், “மோடியை ஊழல் என்று விமர்சித்த குஷ்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது இப்போது அவதூறு வழக்கு போடுவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆல்ட்நியூஸ் என்ற உண்மை கண்டறியும் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், இன்று (மார்ச் 25 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரணியில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் எப்படி வந்தது?” என்று கூறியதற்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். குஷ்புவின் ட்வீட் இதோ” என்று குஷ்பு 2018 ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டை முகமது ஜுபைர் வெளியிட்டுள்ளார்.

ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ”மோடியின் பெயரை ஊழல் என்று மாற்றுவோம்” என்று கூறிய பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் மீது எப்போது அவதூறு வழக்கு பாயும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மெஸ்ஸியை துரத்தும் ரொனோல்டோ: ஜாம்பவான்கள் படைத்த சரித்திர சாதனை!

‘என்4’ விமர்சனம்: இடைவேளையில் தொடங்கும் படம்!

+1
0
+1
3
+1
1
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *