நமது ரத்தத்தையும் சதையையும் கொட்டியாவது கலைஞருக்கு பேனா சிலை அமைப்போம் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
கடந்த ஜூன் 10-ஆம் தேதி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் செம்மொழி மகுடம் திராவிடச் சிகரம் என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதிவீராசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சொல்வேந்தர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பேசியபோது, “உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற பாட்டை கலைஞர் எழுதி ஸ்டாலினிடம் கொடுத்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். பாடல் நன்றாக இருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார். இந்த பாட்டை ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் போன்ற பழம்பெரும் இசையமைப்பாளர்கள் உள்ளபோது ஏ.ஆர்.ரகுமானை தேர்ந்தெடுத்தது ஏன் என்று கலைஞரிடம் கேட்டேன். ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கும்போது “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று மேடையில் கூறினார். அப்போது அவரிடம் இதனை ஆங்கிலத்தில் சொன்னால் அனைவருக்கும் புரியுமே என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நான் தமிழில் சொன்னால் கடவுளுக்கு புரியும். கடவுளுக்கு தமிழ் மொழி தெரியும்” என்று கூறினார். அதனால் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் என்று கலைஞர் கூறினார்.
தனது 18 வயதில் கலைஞர் திருவாரூரில் திராவிட தமிழ் மாணவர் மன்ற பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் அன்பழகன் மற்றும் மதியழகனுக்கு போக்குவரத்து செலவு கொடுக்க கலைஞரிடம் பணம் இல்லை. இதனால் அவர் வீட்டில் இருந்த அறுந்துபோன செயினை அடகுவைத்து, பேராசிரியர் அன்பழகன் மற்றும் மதியழகனுக்கு போக்குவரத்து செலவுக்காக காசு கொடுத்தார். அதுபோல தான் அமைச்சர் சேகர்பாபு கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காக பட்ட துன்பங்களை நான் நேரடியாக பார்த்தேன்.
ஒரு நாள் கலைஞருடன் கோபாலபுரத்தில் இருந்து சிஐடி காலனிக்கு காரில் ஏறியவுடன் நாராயணா என்று கூறிக்கொண்டு உட்கார்ந்தேன். கலைஞர் இடம் இல்லை என்றார். காரில் இடம் இல்லை என்று நினைத்துக்கொண்டு நான் வேண்டுமென்றால் இறங்கி கொள்கிறேன். பின்னர் வருகிறேன் என்று அவரிடம் கூறினேன். நீ சொன்ன நாராயணனுக்கு இடமில்லை என்று கூறினேன் என கலைஞர் சொன்னார். அந்த நாராயணனே நீங்கள் தானே அண்ணே…உங்களை தான் நான் சொன்னேன் என்று கூறினேன். உலகத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதுபோன்ற தலைவனை பார்க்க முடியாது. அன்பை தருவதில் அட்சய பாத்திரம் கலைஞர்” என்று நா தழுதழுத்தார் ஜெகத்ரட்சகன்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு நாள் அரையர் சேவை பற்றியும் 108 திவ்ய தேசங்களில் அரையர் சேவை நடக்கிறதா என்றும் கேட்டார். ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி, திருக்குறுங்குடி ஆகிய நான்கு இடங்களில் நடக்கிறது என்று கூறினேன். அரையர் சேவை என்பது வேடமிட்டு பெருமாளுக்கு முன்பாக தாளம் போட்டு பாடுவார்கள். ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் தான் இதனை துவங்கி வைத்தார். அரையர் சேவை செய்கிறவர்களுக்கு தனியாக வீடு கட்டி கொடுத்தார். அந்த வீதிக்கு செந்தமிழ் பாடுவார் வீதி என்று பெயர் வைத்தார். அதுதான் கலைஞர் ராமானுஜர் காவியத்தை எழுதுவதற்கு தொடக்க புள்ளியாக அமைந்தது.
ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்காக தொடர்ந்து புத்தகங்கள் எழுதியவர் கலைஞர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் மட்டும் தான் எழுதினார். கம்பர் ராமாயணத்தை மட்டும் தான் எழுதினார். கலைஞர் மட்டுமே அனைத்து இலக்கியங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நமது ரத்தத்தையும் சதையையும் கொட்டியாவது கலைஞருக்கு பேனா சிலை அமைப்போம்” என்று உணர்ச்சி பொங்க ஜெகத்ரட்சகன் பேசினார்.
செல்வம்
மருத்துவ பொது கலந்தாய்வு: மத்திய அமைச்சரை சந்திக்கும் மா.சுப்பிரமணியன்
ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!