உட்கட்சி பூசலால் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று (ஏப்ரல் 17) காங்கிரஸில் இணைந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அம்மாநில அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர், ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் பாஜக சார்பில் 6 முறை போட்டியிட்டு தொடர் வெற்றியை பெற்றவர்.
1994ஆம் ஆண்டில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்முறையாக பாஜக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று கட்சியில் முக்கியப் பதவிகளை வகித்தார். பிஎஸ் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகிய 2012 முதல் 2013 வரையில் கர்நாடகாவின் 15வது முதல்வராக பதவி வகித்தார். 2008 இல் கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்தார்,
எடியூரப்பா மற்றும் சதானந்த கவுடா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
இப்படி தொடர்ந்து பாஜகவில் பல்வேறு கட்சி பதவிகளையும், சபாநாயகர், அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளையும் வகித்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது மூத்த தலைவர்கள் பலருக்கு பாஜக சீட் கொடுக்க மறுத்தது. அதில், ஜெகதீஷ் ஷெட்டர் பேரும் இடம் பெறவில்லை.
டெல்லியில் முக்கிய பதவி வழங்குவதுடன், ஜெகதீஷ் ஷெட்டரின் குடும்பத்தினர் ஒருவருக்கு சீட் வழங்குவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய தொகுதியான ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் போட்டியிடதான் சீட் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அவருடைய நிபந்தனைக்கு பாஜக உடன்படவில்லை.
இதனால் கர்நாடகத்தின் மிகப்பெரிய சமுதாயங்களில் ஒன்றான லிங்காயத் சமுதாயத்தின் முக்கிய தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி இன்று காலை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் இன்று காங்கிரஸில் இணைந்தார்.
அப்போது பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “பாஜகவை ஒருங்கிணைத்து வளர்த்தவர்களில் நானும் ஒருவர். ஆனால் பாஜக என்னை முறையாக நடத்தவில்லை. மோசமாக நடத்தப்பட்டேன். பாஜகவில் நான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் என்னுடைய சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்
கடந்த ஏப்ரல் 11ம் தேதி எனக்கும், கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் இல்லை என முதல் முறை எம்.எல்.ஏ ஒருவரிடம் சொல்வது போல் எனக்கு தகவல் கிடைத்தது. சில தனி நபர்களால் கட்சி கட்டுபடுத்தப்பட்டுள்ளது.
நான் பிரதமர் மோடியையோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையோ, பாஜக தேசிய தலைவர் நட்டாவையோ விமர்சிக்கவில்லை. மாநில பாஜகவில் நடைபெறும் சம்பவங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்” என்றார்.
பிரியா
உயரும் முத்திரைத்தாள் கட்டணம் !
கலாஷேத்ரா விவகாரம் : உயர் நீதிமன்றத்தின் புது உத்தரவு!