பாஜக சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மேற்கு வங்க கவர்னர் ஜெக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியாவின் 16வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜக சார்பில், துணை ஜனாதிபதி பதவிக்கு, மீண்டும் வெங்கய்யா நாயுடுவே நிறுத்தப்படலாம் எனவும் அல்லது சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த முக்தர் அப்பாஸ் நக்வி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் ஆகியோர் நிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது.
அதற்குக் காரணம், ஜனாதிபதி பதவிக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை நிறுத்தியுள்ளதால், துணை ஜனாதிபதிக்கு முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று (ஜூலை 16) பா.ஜ. பார்லிமென்ட் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இதில் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மேற்குவங்க கவர்னர் ஜெக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தங்கார், தற்போது மேற்குவங்க ஆளுநராக இருக்கிறார்..
ஜெ.பிரகாஷ்