ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.
பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கப்பட்ட நிலையில், அவரை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை 16ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவரிடம் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி அல்லி, 4 நாட்களுக்கு மட்டும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காவல் முடிந்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆடு ஜீவிதம்… ரயில்… அஞ்சாமை: எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படம்?
அமுதா ஐ.ஏ.எஸ்.சுக்கு ஸ்டாலின் கொடுத்த ‘ஸ்பெஷல்’ அசைன்மென்ட்!