ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் வைத்து அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஜாபர் சாதிக் கைது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் டெல்லியில் இன்று (மார்ச் 9) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
“ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைபொருளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அவர் தலைமறைவாக இருந்தபோது திருவனந்தபுரம், அகமதாபாத், புனே, மும்பை, ஜெய்பூர், டெல்லி என பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்துள்ளார்.
தமிழ் திரைப்படமான மங்கை படம் முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தல் பணத்தில் தயாரிக்கப்பட்டது என்று ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். திமுக அயலக அணி துணை அமைப்பாளராக அவர் இருந்துள்ளார்.
போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை 3+1 என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறினார்.
தொடர்ந்து என்.சி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கின் தலைவராக (கிங்பின்) மற்றும் மாஸ்டர்மைண்டாக ஜாபர் சாதிக் செயல்பட்டுள்ளார்.
இவர் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் அவென்டா நிறுவனத்தின் குடோனில் இருந்து 50.070 கிலோ சூடோபெட்ரைனை என்சிபி பறிமுதல் செய்து, ஜாபர் சாதிக்கின் மூன்று கூட்டாளிகளை கைது செய்தது. இந்நிலையில் டெல்லியில் வைத்து ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.
சூடோபெட்ரைன் என்பது மெத்தம்பேட்டமைன் தயாரிக்கப் பயன்படுகிறது. மெத்தம்பேட்டமைன் என்பது ஆபத்தான மற்றும் மிகவும் அடிமையாக்கக்கூடிய போதைப்பொருள் ஆகும்.
குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, திரைப்படம், கட்டுமானம் , ரியல் எஸ்டேட் என பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.
உணவு பொருள் என்ற பெயரில் போதைபொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதை பொருள்களை கடத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்கான நிதி ஆதாரங்கள் மற்றும் போதைப்பொருள் வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் மூலம் பயனடைந்தவர்கள் யார் யார் என அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது.
போதைப்பொருட்கள் நெட்வொர்க்கை கண்டுபிடித்து கைது செய்ய அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஒத்துழைப்பு அளித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிருத்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?
எலக்ஷன் ஃப்ளாஷ் : பொட்டு வைத்த படமே… விஜய் கட்சியினருக்கு உத்தரவு!
Comments are closed.