சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ – ஜியோ மாநாட்டில் தமிழக முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற, ஜாக்டோ – ஜியோவின் ‘வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ இன்று (செப்டம்பர் 9) சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இம்மாநாட்டில், மாநிலம் முழுதும் இருந்து, 4 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிக் கல்வியில் 107, 108 உள்ளிட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். ஆணையர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் இயக்குநர் பணியிடத்தைக் கொண்டுவர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களை காலமுறை ஊதியத்துக்குள் கொண்டுவர வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தீவுத்திடலில் இன்று நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதையடுத்து, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்றபடியே சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் உரை
இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நீங்கள் தீவுத்திடலில் கூடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் தனித்தீவுகள் அல்ல. கோட்டைக்கு பக்கத்தில் உங்கள் தீவு இருக்கிறது. கோட்டையை உள்ளடக்கியதுதான் உங்கள் தீவு. அதில் நானும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள்; நான் மக்கள் ஊழியன்.

அரசும் அரசியலும் இரண்டறக் கலந்தது. இதனை யாராலும் பிரிக்க முடியாது. அந்த உணர்வோடுதான் இந்த மாநாட்டில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அரசு ஊழியர் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாலும், வேறு எங்கு அரசியல் பேசுவது? 6வது முறையாக திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் காரணம். இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டது.
இதற்கு நாங்கள் என்றும் பக்கபலமாக இருப்போம். எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்களும் நானும் ஒரேமாதிரி சிந்திக்கிறோம். ஆகையால் நாம் இருவரும் வேறுவேறு அல்ல. கடந்த ஆட்சியில் நீங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவந்தீர்கள். அதற்காக பலவழிகளில் பழிவாங்கப்பட்டீர்கள்.
கொரோனா காலத்தில் கடும் நிதிநெருக்கடி இருந்தபோதும், மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல், தமிழக அரசு அலுவலர்களுக்கு தாமதமின்றி, முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2022 முதல் 18 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்புகள்!
இப்போதும் நான் என்ன அறிவிப்பேன் என மிகுந்த எதிர்பார்ப்போடு நீங்கள் காத்திருக்கிறீர்கள். இந்த மாநாட்டுக்கு வருவதற்கு முன்பு உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் சில கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன். 15 மாதம்தான் ஆகியிருக்கிறது. 10 வருடம் பட்ட கஷ்டத்தை, படிப்படியாக நிறைவேற்றுவோம்.

அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அனைத்துவகையான தற்காலிக பகுதிநேர பணிகளுக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும் பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர். அடுத்து, பல்லாண்டுக்காலமாக பணி மாறுதல் இன்றி இருக்கக்கூடிய இப்பணியாளர்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப, இணையவழியே ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 முதல் நடத்தப்படும்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வி துறையின் கட்டமைப்பு மறு சீரமைப்பு என்ற பெயரில் அரசாணை 101 வாயிலாக 18.05.22 அன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆசிரியர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்நிர்வாக முறை அதிருப்தியே ஏற்படுத்தியது. இந்த மறு சீரமைப்பில் இருந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, இதனை களையவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அரசாணை 151 வாயிலாக உரிய உத்தரவை 9.9.22 அன்று பிறப்பித்திருக்கிறேன்.
இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடக்க கல்விக்கென மாவட்ட அலுவலர், பணியிடம் புதிதாகக் கிடைக்கப் பெறுவதுடன், தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலோ இந்திய பள்ளிகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தோடு முடிந்துவிடுவதில்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்