ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு இன்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், “எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். எங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதற்கான தீர்வுகளைத் தெரிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அதுபோன்று எங்களது போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அமைச்சர்களின் வேண்டுகோளையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முதல்வர் கொண்டுள்ள அக்கறையையும் கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ தனது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அத்தனை கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். கடந்த ஆட்சியாளர்கள் போல் இல்லாமல் சொன்னதைச் செய்வார்கள் என நம்புகிறோம். அமைச்சர்கள் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
பிரியா
புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார் மோடி
57 கோடி யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகளை இழந்த இமயமலை!