ஜாபர் சாதிக் ஜாமீன் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விலகுவதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்பிறகு இவர் மீது அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அவரது சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “இருவரும் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 19ஆம் தேதி மாலை 6 மணியளவில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே இவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி, மனு நிலுவையில் இருந்த போது எப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மருத்துவக்கழிவு: கேரளா காசு கொடுக்குது… தமிழர்கள் காட்டி கொடுக்குறாங்களா?