போதைப்பொருள் கடத்தல்: திமுக அரசை கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Kavi

Edappadi protest against DMK government

போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்த மூளையாக செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் தலைமையில் போதை பொருட்களை கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், “போதை பொருட்கள் கடத்தலில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (பிப்ரவரி 27) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா முழுவதும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற ஆளும் திமுக கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை, அந்த நாடுகளுடைய காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த பிறகு, Narcotics Control Bureau என்று சொல்லப்படுகின்ற NCB அமைப்பும், இந்த போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக், திமுக அரசின் முதலமைச்சருடனும், விளையாட்டுத் துறை அமைச்சருடனும், மேலும் பல அமைச்சர்களுடனும் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும்.

இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

Edappadi protest against DMK government

தமிழக காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில், மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்துப் பாராட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய, முதலமைச்சருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்ற காவல் துறைத் தலைவர், உலகின் பல நாடுகளிலே போதைப் பொருட்களை புழக்கத்திலே விட்டிருக்கின்ற, போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனோடு நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார் என்பதைப் பார்க்கின்றபோது, உண்மையிலேயே தமிழ் நாட்டு மக்களுடைய பாதுகாப்பு இந்த அரசால் எந்த லட்சணத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்கிற பேரச்சம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இதன்மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு அரசு எந்திரத்திற்கே தொடர்பு இருக்கிறது என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. எனவே, ‘வேலியே பயிரை மேய்கிறதா?’ என்ற சந்தேகம் தமிழ் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது.

இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து, அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், 4.3.2024 திங்கட் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தங்கத்தின் விலை லேசாக உயர்வு…1 கிராம் எவ்வளவுன்னு பாருங்க!

“அடுத்த தோனி”: இளம் வீரருக்கு குவியும் ஜாம்பவான்களின் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share