சென்னை மாவட்டத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களுக்கான அறங்காவலர் குழுவினரின் பதவியேற்பு விழா சென்னை பாரிமுனையில் இருக்கும் கந்தகோட்டம் கோயில் மண்டபத்தில் டிசம்பர் 12 ஆம் தேதி இரவு நடைபெற்றது.
இத்துறையின் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்களை வாழ்த்திப் பேசினார்.
தமிழ்நாடு முழுதும் ஒவ்வொரு கோயிலுக்கும் அறங்காவலர் குழுவினரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுதான் அந்தந்த மாவட்ட கோயில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்ந்தெடுக்கும்.
இந்த வகையில் சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களுக்கான அறங்காவலர் குழுத் தலைவராக எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனும், உறுப்பினர்களாக வெற்றிவீரன், சாவித்ரி வீரராகவன், பாஸ்கர், விஜய் வெங்கடேசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவியேற்பு விழா தான் சென்னை கந்தகோட்டம் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ இந்த நிகழ்ச்சி பெரிய அரங்கத்தில் நடத்தப்படவேண்டியது என்றாலும் தெய்வ சன்னிதானத்தில் நடத்தினால்தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதால் இந்த கந்தக்கோட்ட முருகன்கோயில் வசந்த மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
முதல்வர் நேர்த்தியாக இறை பக்தி உள்ளவர்களை, ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்களை, ஒழுக்கத்தோடு இறை பக்தி கொண்டவர்களை, மக்கள் நலனில் ஆர்வம் கொண்டவர்களை மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்” என்று பேசிய அமைச்சர் சேகர்பாபு.
இக்குழுவின் தலைவரான முன்னாள் எம்.எல். ஏ. ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்களான வெற்றிவீரன், சாவித்ரி வீர ராகவன், பாஸ்கர் ஆகியோரைப் பற்றி பேசினார். இவர்களின் ஆன்மீக சேவைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசிய அமைச்சர் சேகர்பாபு இன்னொரு உறுப்பினரான விஜய் வெங்கடேசன் பற்றி பேசியதுதான் அந்த அரங்கத்திலும் அரசியல் அரங்கத்திலும் கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“விஜய் வெங்கடேசன் இரண்டு பெயர்களை இணைத்து வைத்திருக்கிறார். ஏதோ தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்த கம்யூனிட்டியை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என்ற அமைச்சர் சேகர்பாபு, உறுப்பினர் விஜய் வெங்கடேசனைப் பார்த்து சொல்லுங்க என்று கை காட்டினார்.
‘அய்யங்கார் சமுதாயத்தைச் சேர்ந்தவன்’ என்று விஜய் வெங்கடேசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, ‘அவர் அய்யங்கார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே அய்யங்கார் என்றாலே பிடிக்காது என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.
முதலமைச்சரைப் பொறுத்தவரை இன்னார் இனியர் என்றெல்லாம் பார்க்காமல்… சமூகத்தில் யார் யாரெல்லாம் சமூக வளர்ச்சிக்கு அக்கறையாக இருக்கிறார்களோ இறைப்பணிக்கு யாரெல்லாம் தொண்டாற்ற விரும்புகிறார்களோ அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து அங்கீகாரம் தரும் முதல்வராக நமது தமிழக முதல்வர் இருக்கிறார் என்பதற்கு இவர் ஓர் அடையாளம்” என்று குறிப்பிட்டார் அமைச்சர் சேகர்பாபு.
–ஆரா
“நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி”: எடப்பாடி கிண்டல்!
கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர் தேர்வு!