அமலாக்கத் துறை சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 15) மருத்துவமனைக்கு வருகை புரிந்த திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக தலைமைச் செயலாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய துரை வைகோ, “முக்கிய ஆவணங்கள் கிடைத்திருக்கிறது என்று அமலாக்கத் துறை சொல்கிறது. என்ன ஆவணங்கள் கிடைத்திருக்கிறது என்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்து தீர்ப்பு வரும்போதுதான் தெரியும்.
விசாரணை, சோதனை நடத்துவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லாமல் கைது செய்திருக்கின்றனர்.
ஓமந்தூரார் மருத்துவர்களும், இஎஸ்ஐ மருத்துவர்களும் செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஒரு இடத்தில் 90 சதவிகித அடைப்பு, மற்றொரு இடத்தில் 80 சதவிகித அடைப்பு உள்ளது. அதனால் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் டிராமாக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இஎஸ்ஐ மருத்துவர்களே அடைப்பு இருப்பதாக உறுதி செய்திருக்கிறது.
மத்திய விசாரணை அமைப்புகள் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் சோதனை செய்யட்டும், ஆனால் இப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடாது” என குறிப்பிட்டார்.
பிரியா